டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்வதற்கு முயன்ற விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக யாழ்ப்பாணப் பெண் ஒருவருக்கு ஒத்திவைக...
டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்வதற்கு முயன்ற விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக யாழ்ப்பாணப் பெண் ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அவர் கடந்த 14 ஆண்டுகளாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதைக் கருத்திலெடுத்தே இந்த்த் தண்டனை வழங்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்துவதற்காக சென்ற பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனையிட முயன்ற போது, அவர் குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவத்தில் 5 பொலிஸார் கொல்லப்பட்டனர்.
தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வகுமார் சத்தியலீலா என்ற மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டார்.
அவர் கடந்த 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரைகளின் நிறைவில் செ.சத்தியலீலாவதி குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சியால் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட பெண் தண்டனையை அனுபவிக்க வேண்டிய காலத்துக்கும் அதிகமாகவே சிறையில் இருந்து விட்டார் என்பதால், 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத்தண்டனையையும், 25 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.