இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த ...
இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
அந்த தகவலை உள்வாங்கிக் கொள்ளவே அனைவருக்கும் சிறிது நேரம் ஆனது. பலர் அந்த தகவல் உண்மையாக இருக்க கூடாது. வெறும் வதந்தியாக கடந்து சென்ற விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
ஆனால் அது வதந்தி அல்ல. நிஜம்தான். ஆம், ஸ்ரீதேவி 54 வயதில் இந்த பூவுலகைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
அவர் துபாயில் ஒரு திருமண நிகழ்வில் இருந்தபோது, அவர் கார்டியாக் அரெஸ்ட்டில் இறந்தார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது உடல் நிலையில் எப்போதும் மிகவும் கவனமாக இருக்கும் ஒரு பிரபலம் இதுபோல சட்டென்று இறந்துபோவது நம்பமுடியாத ஒரு விஷயம்.
என்ன ஆனது ஸ்ரீதேவிக்கு?
இதனை தெரிந்துக் கொள்ள கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.
கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?
கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது?
ஸ்ரீதேவி மரணத்தில், `உடனடியாக`. `திடீரென்று' இறந்தார், ஆகிய பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏன் அந்த பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன?
ஹார்ட் (heart.org) இணையதளத்தின் தகவலின்படி, கார்டியாக் அரெஸ்ட் என்பது உடலில் எந்தவொரு எச்சரிக்கையையும் காட்டாமல் திடீரென்று ஏற்படுவது.
இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகள்தான், பொதுவாக, கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம். இந்த இடையூறு, இதயத் துடிப்பில் ஆதிக்கம் செலுத்தி, அதன் நிகழ்வுத் தன்மையில் குறிக்கிடுகிறது.
இது இதய ரத்த ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, மூளை, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது.
கார்டியாக் அரெஸ்டால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்த சில நொடிகளில் தங்கள் சுயநினைவை இழக்கிறார்கள்.
சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், கார்டியாக் அரெஸ்ட் சில விநாடிகளில் அல்லது சில நிமிடங்களில் மரணத்தை கொண்டு வரும்.
கார்டியாக் அரெஸ்ட்டால் ஸ்ரீதேவி இறந்திருக்கலாம் எனும் பட்சத்தில், இப்படிதான் அவர் இறந்திருப்பார்.
கார்டியாக் அரெஸ்ட்டால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்க முடியாததா?
அமெரிக்காவை சேர்ந்த மூத்த மருத்துவர், செளரப் பன்சால், பிபிசியிடம்,"இது சோகமான ஒன்று. பொதுவாக கார்டியாக் அரெஸ்ட் வரும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்" என்கிறார்.
"கார்டியாக் அரெஸ்டை மரணத்திற்கு, முந்தைய கடைசி கட்டம் என்று கூறலாம். இதன் பொருள் என்னவென்றால், இதயம் தன் துடிப்பை நிறுத்தி, மரணத்தை கொண்டுவருவது."
என்ன காரணத்தினால் ஏற்படுகிறது?
பன்சால் விளக்குகிறார், "இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாக பிரதான மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) இதற்கு காரணமாக இருக்கலாம்".
"ஆனால், அதே நேரம், 54 வயதில் ஒருவருக்கு உயிரை கொல்லும் மாரடைப்பு வருவது எல்லாம் மிகவும் குறைவு. அவருக்கு வேறு ஏதேனும், உடல்நல பிரச்சனைகள் இருந்து இருக்கலாம். ஆனால், அது என்ன என்று நமக்கு தெரியாது." என்கிறார்.
கார்டியாக் அரெஸ்ட்டுக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா?
பெரும் பிரச்சனை என்னவென்றால், கார்டியாக் அரெஸ்ட் எந்த அறிகுறிகளையும் காட்டாது. திடீரென்று ஒருவருக்கு ஏற்படும் என்பதுதான்.
இதயத்தில் மின் செயல்பாடுகள் மோசமடைந்து, இதய துடிப்பை நிறுத்தும்.
கார்டியாக் அரெஸ்ட்டுக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சில இதயம் சம்பந்தமான நோய்கள், கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் சாத்தியத்தை அதிகப்படுத்தும்.
அவை:
- இரத்தக் குழாய் சார்ந்த இதய நோய்கள்
- மாரடைப்பு
- இதயத் தசைநோய்
- பிறவி இதய கோளாறுகள்
- இதய வால்வில் ஏற்படும் கோளாறுகள்
கார்டியாக் அரெஸ்ட்டுக்கு வேறு சில காரணங்களும் உண்டு. அவை,
- மின்னதிர்ச்சி
- அளவுக்கு அதிகமாக மருந்தை உட்கொள்வது.
- நீரில் மூழ்குதல்
தவிர்க்க முடியுமா? கார்டியாக் அரெஸ்டை குணப்படுத்த முடியுமா?
முடியும். நெஞ்சில் மின் அழுத்தம் கொடுப்பது மூலம் குணப்படுத்த முடியும். இதற்கு `டெஃபிபிரிலேட்டர்` என்ற உபகரணம் தேவைப்படும்.
இந்த உபகரணம் அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
டெஃபிபிரிலேட்டர் இல்லாத நேரத்தில் என்ன செய்ய வேண்டும். கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்)-ஐ பயன்படுத்தலாம். இதில், நோயாளியின் நெஞ்சுக்கு அழுத்தம் தரப்படும்.
இதுவும் இல்லாதபட்சத்தில், நேயாளியின் வாய் மூலமாக காற்றை செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.
கார்டியாக் அரெஸ்ட்டுக்கும்... ஹார்ட் அட்டாக்கிற்கும் என்ன வித்தியாசம்?
பலர் கார்டியாக் அரெஸ்ட்டும், ஹார்ட் அட்டாக்கும் ஒன்று என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.
இதய தமனியில் ரத்த உறைவு ஏற்படும் போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
இதயம் பயங்கரமாக வலிக்கும். பல சமயங்களில் இதன் அறிகுறிகள் பலவீனமானதாக இருக்கும். ஆனால், போதுமான சேதத்தை இதயத்திற்கு ஏற்படுத்தும்.
மாரடைப்பின் போது, இதயம் தொடர்ந்து பிற பகுதிகளுக்கு ரத்தத்தை செலுத்தும். மாரடைப்பால் தாக்கப்பட்டவர் சுயநினைவோடுதான் இருப்பார்.
ஆனால், அதே நேரம் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்ட்டியாக் அரெஸ்ட் வரும் வாய்ப்புகள் மிக அதிகம்.
எளிமையாக பன்சால் விளக்குகிறார், "கார்டியாக் அரெஸ்ட் என்றால் இதய துடிப்பு நின்றுபோதல். ஹார்ட் அட்டாக் என்றால், இதயம் போதுமான ரத்தத்தை பெறாமல் இருத்தல்."