எப்போதும் பூமிக்கு வெளியே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்றே விரும்பிய பிரித்தானிய கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆசை கடைசியாக...
எப்போதும் பூமிக்கு வெளியே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்றே விரும்பிய பிரித்தானிய கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆசை கடைசியாக நிறைவேறியது என்றே கூறலாம். ஆம், இன்று அவர் தனது பூவுலக வாழ்வை முடித்தார்.
அறிவியலுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும் பிறந்த அன்றே தொடர்பு ஏற்பட்டது. ஆம், அவர் பிறந்த நாளாகிய 8 ஜனவரி 1942, கலிலியோவின் 300 ஆவது நினைவு நாளாகும்.
சிறு வயதில் வால் பையனாக இருந்த ஸ்டீபன் ஹாக்கிங் படிப்பிலும் சுமார்தான்.
எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி செய்வதாகக் கூறிக் கொண்டு கடிகாரங்களையும் ரேடியோக்களையும் பிரித்துப் போடும் அவர் ஒன்றையும் திரும்ப சரி செய்ததில்லை!
21 வயதாக இருக்கும்போது Lou Gehrig's disease (amyotrophic lateral sclerosis) என்னும் நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் இறப்பிற்கு நாள் குறித்தார்கள், அதிக பட்சமாக இரண்டு ஆண்டுகள்.
ஸ்டீபன் ஹாக்கிங் மருத்துவர்களின் கணிப்பை மீறி 1966 ஆம் ஆண்டு Properties of Expanding Universes என்னும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த ஆய்வறிக்கை ஆன்லைனில் வெளியிடப்பட்டதால் அதைப் பார்க்க ஏராளமானோர் ஒரே சமயத்தில் இணையத்தை மொய்க்க இணையதளம் க்ராஷ் ஆனது.
1970 ஆம் ஆண்டு அவர் கருந்துளைகள் கதிரியக்கத்தை வெளியிடுகின்றன என்னும் தனதுபுகழ்பெற்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
2015 ஆம் ஆண்டு ” நாம் தனியாகவா இருக்கிறோம்?”என்னும் கேள்வியின் விடையைக் கண்டறியும் விதத்தில் வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்னும் ஆய்வுகளை துவங்க உதவினார்.
தனது நோய் தாக்கத்தின் விளைவாக பேசும்திறனை இழந்த ஸ்டீபன் ஹாக்கிங், speech synthesizer என்னும் கருவியின் உதவியாலேயே மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார். இரு முறை திருமணம் செய்த அவருக்கு மூன்று பிள்ளைகளும் மூன்று பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
சோதனைகளும் வேதனைகளும் ஏராளமாக இருந்தாலும் அறிவியல் உலகில் அவர் புரிந்த சாதனைகள் ஏராளம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் Sir Isaac Newton வகித்த Lucasian Professor of Mathematics என்னும் புகழ் பெற்ற பொறுப்பை அவர் வகித்தார்.
சுமார் 12 கௌரவப் பட்டங்கள் வகித்த அவருக்கு பிரித்தானியாவின் உயரிய கௌரவமாகி Commander in the Most Excellent Order of the British Empire என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
பிரித்தானியராக இருந்தாலும் அறிவியல் உலகில் அவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமெரிக்காவின் உயரிய கௌரவமாகிய Presidential Medal of Freedom அமெரிக்க ஜனாதிபதி Barack Obamaவால் அளிக்கப்பட்டது.
எவ்வளவோ கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள், பேரும் புகழும் இருந்தாலும், எப்போதும் மக்கள் பூமியில் மட்டும் வாழாமல் அதையும் தாண்டி இன்னொரு கிரகத்திற்கும் சென்று வாழ வேண்டும் என்னும் ஆசை கொண்டவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
ஆனால் “எவ்வளவு பெரிய விண்வெளியாக இருந்தாலும் நீங்கள் நேசிக்கும் மனிதர்கள் அங்கு இல்லாவிட்டால் அதினால் பயன் எதுவும் இல்லை” என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கின் வார்த்தைகளின் பின்னால் அன்புக்கான ஒரு ஏக்கம் இருந்தது எத்தனை பேருக்குத் தெரியும்?