தேசியத் தலைவரின் கனவுக் கிராமத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புற்பாய் நெசவு நிலையம் அமைக்கப்பட...
தேசியத் தலைவரின் கனவுக் கிராமத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புற்பாய் நெசவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கனவுத் திட்டத்தில் வாதரவத்தையில் உருவாக்கப்பட்டிருந்த அக்காச்சி குடியிருப்பு பகுதியில் புற்பாய் நெசவு நிலையம் ஒன்றினை கௌரவ வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களுக்கான 2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர்களுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூபா 2.0 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினை கௌரவ வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கடந்த 22.02.2018 அன்று திறந்துவைத்திருந்தார். இவ் புற்பாய் நெசவு கூடத்தை திறந்து வைத்து அமைச்சர் அவர்கள் மேலும் பேசுகையில்,
வாதரவத்தை கிராமத்தின் அக்காச்சி குடியிருப்பு என்பது ஒரு வராலாற்று இடமாகவே நான் பார்க்கின்றேன். இந்திய இராணுவத்தின் காலத்தில் இந்த மண்ணில் பல குடும்பத் தலைவர்கள் கொல்லப்பட்டு வைக்கோல் போருக்குள் போட்டு எரிக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு இனப்படுகொலைக்குள்ளான இந்த இடத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் தோற்றம் பெற்றதே இந்த அக்காச்சி குடியிருப்பாகும்.
அந்தக் காலத்தில் தலைவரின் கனவு கிராமமாக உருவாக்கப்பட்டிருந்த இவ்விடத்தைச் சேர்ந்தவர்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த புற்பாய் நெசவு நிலையத்தினை அமைத்து மீள இயங்க வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தேன்.
தேசியத் தலைவரின் நேரடி கவனத்தை பெற்றிருந்த இக்கிராமத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டிருந்த இந்த புற்பாய் தொழிற்சாலை கடந்த கால அனர்த்தங்களால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் நினைவுத் தடங்களாக அதன் எச்சங்கள் காணப்பட்டது. புற்பாய் தயாரிப்பதற்கான புற்கள் சுற்றிவர இருக்கும் குளத்தில் உற்பத்தியாகும் காரணத்தினால் மூலப்பொருட்கள் இலகுவில் கிடைக்கும் ஏது நிலை காணப்படுகின்றது.
இதனை சாத்தியமாக்கி தேசியத் தலைவரின் கனவினைத் தொடரும் வகையில் 2.0 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கி இக் கைத்தொழிற்சாலையை நிறுவியுள்ளேன். அபிவிருத்திக்காக மட்டும் பயன்படுத்ப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒதுக்கப்பட்ட இந் நிதியில் இத்திட்டத்தினை மேற்கொண்டிருப்பது உங்கள் வளர்ச்சிக்காகவே. நான் இங்கு வாக்கு கேட்டு வரப்போவதில்லை. என்னுடய நோக்கம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு நிலைபேறான அபிவிருத்தியின் மூலம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே.
அதற்கான இடவமைவும் பொருத்தப்பாடான சூழலும் இங்கு ஒருங்கே காணப்பட்டது. அந்த வகையில் இத்திட்டத்தை தெரிவு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளேன். உதவித்திட்டப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோருடன் இப்பகுதி இளைஞர்களும் முனைப்புடன் செயலாற்றி இத்திட்டத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றியுள்ளார்கள். எனது சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த 2.0 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த புற்பாய் நெசவு நிலையத்தை அமைத்துக் கொடுத்ததில் எனக்கு உண்மையில் ஆத்ம திருப்தியாகும் என அமைச்சர் அவர்கள் மேலும் பேசியிருந்தார்.
இந்நிகழ்வில், கௌரவ வடமாகாண கல்வி அமைச்சர் திரு க.சர்வேஸ்வரன் அவர்களும், வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வட மாகாண தொழிற்துறை திணைக்கள பணிப்பாளர், முன்நாள் கோப்பாய் பிரதேச செயலாளரும் இன்நாள் வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அக்காச்சி குடியிருப்பு மக்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.