உயிர்கள் வாழ்வதற்கு ஏதுவான வகையில் வடிவமைந்துள்ளது இந்த புவி. உயிர்கள் அனைத்தும் புவியிலுள்ள பெரும்பாலான விடயங்களில் தங்கியே வாழ்கிறன. கு...
உயிர்கள் வாழ்வதற்கு ஏதுவான வகையில் வடிவமைந்துள்ளது இந்த புவி. உயிர்கள் அனைத்தும் புவியிலுள்ள பெரும்பாலான விடயங்களில் தங்கியே வாழ்கிறன.
குறிப்பாக உணவு, காற்று, நீர், வாழிடம் உட்பட பெரும்பாலானவை..
இவற்றில் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாக காணப்படும் விடயங்களில் நீரும் ஒன்று. அந்த வகையில் நமது அன்றாட தேவைகள் பலவற்றில் பங்கு கொள்கிறது நீர். அதிலும் குறிப்பாக குடிநீர்.
சந்ததி சந்ததியாக நீரின் முக்கியத்துவம் போதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 47ஆவது கூட்டத்தொடரில் மார்ச் 22ஆம் திகதி உலக குடிநீர் தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்த வருடமும் மார்ச் 22ஆம் திகதி உலக குடிநீர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அதிக வெப்பநிலையின் காரணமாக இலங்கையின் நீர்ப்பாவனை அதிகரித்துள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த சில தினங்களில் நீர்ப்பாவனை 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மை அறியாமலேயே நமது நாட்டில் நீரின் மதிப்பு மக்கள் மத்தியில் மறைந்து வருகின்றதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
காரணம் யாதெனில் இலங்கையில் திருகோணமலை, கண்டி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்கள் நீர்ப்பற்றாக்குறையால் அடிக்கடி பாதிக்கப்படும் மாவட்டங்களாக காணப்படுகின்றன.
இந்த மாவட்டங்களில் குறிப்பாக யாழ். மாவட்டமானது அதிகளவில் நீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலின் அடிப்படையில் நீரின்றி பாதிப்பை எதிர்நோக்கும் உயிர்களின் வலியை உணர்ந்தால் கண்டிப்பாக நீர் எனும் பொக்கிஷத்தின் மதிப்பை அறிந்து கொள்ள முடியும்.
அத்துடன் கடந்த காலத்தில் யுத்தத்தின் வலிகளால் சவாலை சந்தித்த இலங்கை எதிர்காலத்தில் முகம் கொடுக்க வேண்டிய மிகப்பெரியதொரு சவாலாக நீர்ப்பற்றாக்குறை காணப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எனினும் இந்த புவியில் பூமியில் நிலப்பரப்பு வெறும் 30 சதவீதமாக இருக்க, மீதம் இருக்கும் 70 சதவீத பகுதியையும் ஆட்கொண்டுள்ளது நீர்.
இவ்வாறான நிலையில் ஏன் இந்த நீர்த்தட்டுப்பாடு? 70 சதவீதம் நீர்ப்பரப்பு இருந்தாலும், அதில் 97.5 சதவீதம் உப்பு நீர்ப்பரப்புதான் என்பதுடன் இதில் நிலத்தடிநீர் வெறும் 2.5 சதவீதமே.
அதில் பனிப்பாறைகளாகவும், பனித்தரைகளாகவும் உள்ளது போக மீதி நன்னீர்ப் பரப்பு 0.26 சதவிகிதம்தான். இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
30 சதவிகிதம் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு 0.26 சதவிகிதம் நீர்தான் உள்ளது. இவ்வாறான நிலையில் ஒரு நாள் மட்டும் நீரைப்பற்றிப் பேசிவிட்டு மீதமுள்ள நாட்களில் அதனைப் பற்றி மறந்துவிடுகிறோம்.
உலகில் சுமார் 240 கோடி மக்கள் ஓர் ஆண்டில் குறைந்தது ஒரு மாத கால அளவு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மூன்றாம் உலக மகா யுத்தம் வருமானால் அது நீருக்கான போட்டியினாலுமாக இருக்கலாம் என பல சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.