பீகார் மாநிலத்தில் தனது மகனின் தொல்லை தாங்கமுடியாத காரணத்தால் கூலிப்படை ஏவி கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பாட்னாவில் வசித்த...
பீகார் மாநிலத்தில் தனது மகனின் தொல்லை தாங்கமுடியாத காரணத்தால் கூலிப்படை ஏவி கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாட்னாவில் வசித்து வந்த ரேணுதேவி என்பவரின் மகன் மின்டு ராம். இவருக்கு திருமணமாகி அஞ்சுதேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் திருமணம் ஆன பின்னரும், மின்டு தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண்களை கிண்டல் செய்துவந்துள்ளார். மேலும் சில பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்
இதுகுறித்து மின்டுவின் தாயிடம் அப்பெண்கள் புகார் அளித்ததால், அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கொடுக்கும் பழக்கம் மின்டுவுக்கு இல்லை. இதனால் கடன்காரர்கள் ரேணுதேவியை தொந்தரவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி தனது தாயை அடித்து கொடுமை செய்துள்ளார் மின்டு. இப்படி ஒரு மகன் இருப்பதை விட இறப்பதே மேல் என முடிவு செய்த ரேணு, கூலிப்படையைச் சேர்ந்த தரம் வீர், சரவண்குமார் ஆகியோரிடம் 50,000 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து தனது மகனை கொலை செய்துவிடுமாறு கூறியுள்ளார்.
அதன்படி, மின்டு ராமை கொலை செய்து அவனது உடலை புதருக்குள் வீசிச் சென்றுள்ளனர். உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், தாய் ரேணுவின் பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது .
ஆரம்பத்தில் பொய்யாக தகவலை தெரிவித்த ரேணு, ஒரு கட்டத்தில் எதற்காக தனது மகனை கொலை செய்தேன் என்பது குறித்து மேற்கூறப்பட்ட தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.இதையடுத்து ரேணுவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கூலிப்படை நபர்களை தேடி வருகின்றனர்.