எவ்வளவுதான் படித்தாலும், அரச உயர் பதவிகளில் இருந்தாலும் முதிர்ச்சியான, பக்குவமான மனநிலை நமது அரச உத்தியோகத்தர்கள் பலரிடம் இருப்பதில்லை. குறி...
எவ்வளவுதான் படித்தாலும், அரச உயர் பதவிகளில் இருந்தாலும் முதிர்ச்சியான, பக்குவமான மனநிலை நமது அரச உத்தியோகத்தர்கள் பலரிடம் இருப்பதில்லை. குறிப்பாக பெண்கள் தொடர்பான பார்வையில் ரௌடிகளாக வரையறைக்கப்படுபவர்களிற்கும், நமக்கும் வித்தியாசமில்லையென அடிக்கடி பலர் நிரூபித்து வருகிறார்கள்.
பலரது மன கசடுகளை சமூகஊடகங்கள் வெளிச்சமிட்டு காட்டி விடும்.
அப்படி இப்பொழுது சிக்கியுள்ளார் வவுனியாவை சேர்ந்த கிராமசேவகர் ஒருவர்.
பொதுவெளியில் பெண்கள் தொடர்பாக பிற்போக்குத்தனமாக எழுதி வருபவராக பலராலும், பல சந்தர்ப்பத்திலும் குறிப்பிட்டு வந்த நபரே, இப்பொழுது பெண்ணொருவருடன் எல்லைமீறி நடந்து கொண்டு சிக்கலில் சிக்கியுள்ளார்.
பெண்ணிய செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்பில் அவதூறாக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக திடீரென உருவான போலி முகநூல்கள் வழியாகவும் அந்த பெண்ணிற்கு மிரட்டலும், பாலியல் மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா கிராமசேவகருடனான முரண்பாட்டையடுத்தே இந்த போலி முகநூல் மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கூட்டு பலாத்காரம் செய்யப்படுவார் என மிரட்டப்பட்டுள்ளார். போலி பேஸ்புக் மிரட்டல் விடுத்த ரௌடிகள் யார்?. கிராமசேவகர்- பெண்ணுரிமை செயற்பாட்டாளர் முரண்பாட்டுடன் தொடர்புடையதா என்பது முறையான விசாரணைகளின் பின்னரே தெரிய வரும். அது தொடர்பான முறையான விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டிய பொறுப்பு பொலிசாருக்குள்ளது.
முகநூல் அவதூறுகள் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், பாதுகாப்பு செயலாளரிற்கு எழுத்துமூலம் அந்த பெண் முறையிட்டுள்ளார். இது தவிர, எழுத்து மூலம் ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
அவர் அனுப்பி வைத்த கடிதம்-
S.M.தர்ஷினி
பெண்விடுதலைச் சிந்தனைகள் அமைப்பு ,
2020.08.30.
பிரதேச செயலாளர்,
பிர்தேச செயலகம்,
வவுனியா.
வணக்கம்,
கிராம உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு.
வவுனியா பிரதேச செயலக பிரிவுட்குட்பட்ட மருதமடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமை புரியும் R. சுயந்தன் என்பவர் சமூக வலைதளங்களில் பெண்களிடம் நாகரிமகற்று நடந்து கொள்வதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறேன்.
தனது முகநூல் சுயவிபரத்தில் தான் வவுனியா பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோத்தராக பணி புரிவதாக பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
அரச உத்தியோகத்தரான ஒருவர் பொதுவெளிகளில் நாகரிகமாக உரையாடுவதும் மானுட விழுமியங்களைப் பேணுவதும் கடமையாகும். அதுவும் கிராம உத்தியோகத்தர் என்பவர் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுட்குட்பட்ட பொது மக்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் பொறுப்புடையவராவார்.
திரு.ஆர்.சுயந்தன் என்கிற நபர் பொதுவெளியில் அவரோடு சம்மந்தமற்ற , பொதுப்பிரச்சனை ஒன்றிற்காக பேசிய என்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார்.
தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய பெரியார் (ஈ.வே.ராமசாமி) எனும் மாமனிதரின் சாதிய ஒழிப்பு, பெண் விடுதலை போன்றவற்றை நான் எப்போதும் சமூக வலைதளங்களில் பிரசாரப்படுத்தி எழுதுவேன். அதற்காக பெரியார் இப்போது இருந்திருந்தால், இவள் பெரியாரைய்ம் வைத்துக்கொண்டிருப்பாள் என்று கேடுகெட்ட அநாகரிகமான விமர்சனத்தை அவர் முன்வைத்திருப்பதை நீங்கள் மேலேயுள்ள இணைப்பில் கண்டிருப்பீர்கள்.
நமது வாழ்நாளில் பல்வேறு மாமனிதர்களின் கொள்கைகளை பின்பற்றும் நாம் அவர்களை வாழ்வியல் வழிகாட்டியாக கொண்டிருக்கிறோம். ஏன் வடக்கில் பல பெண்கள் பிரபாகரன் அவர்களை தன் தலைவராக வரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் நீ அவரை வைத்துக்கொண்டிருப்பாய் என எந்தப் பெண்ணையாவது சொல்வது எவ்வளவு அநாகரிகமானது. அதே போல பெரியாரைப் பின்பற்றும் பெண்களை பெரியார் உயிரோடு இருந்தால் பெரியாரை வைத்துக் கொண்டிருப்ப்பாள் என்று கிராம உத்தியோகத்தரான ஒருவர் பேசுவது மானுட நாகரித்திற்குட்பட்டதா?
இந்த பண்பாடானது பெண்களைப் பற்றிய அவரது கீழ்த்தரமான பார்வையில் இருந்தே வருகிறது. பெண்கள் அரசியலிலோ, பொதுவெளியிலோ பேசும் போது அவரை பாலியல் ரீதியாக அவதூறு கூறுவது அவரது ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துகிறது. இவரின் ஒட்டு மொத்த பெண்கள் பற்றிய கேவலமான மதிப்பீடே இதுவாகும். இவர்களைப் போன்ற கேவலமானவர்கள் தான் ஒரு சான்றிதழில் கையொப்பமிட பாலியல் லஞ்சம் கோரும் கேடுகெட்ட காரியங்களைச் செய்யத் துணிபவர்கள்.
ஏனெனில் எந்த பெண்ணும் எந்த ஆணுடனும் பாலியல் தொடர்பை வைத்துக்கொள்வாள் என்கிற கேடுகெட்ட சிந்தனையின் வெளிப்பாடுகளே பொதுவெளியில் இவ்வாறான வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
ஓர் அரச உத்தியோகத்தர், அதுவும் பொதுமக்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் பொறுப்பிலுள்ள உத்தியோகத்தர் இவ்வாறு பொதுவெளிகளில் அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகிப்பது தாபன விதிக் கோவையின் படி ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதா?
இவர்களின் நன்னடத்தைக்கு பிரதேச செயலாளரான தாங்களே பொறுப்பு என்பதால் இவரைப் பற்றிய குற்றச் சாட்டை உங்களிடம் கொண்டு வருகிறேன்.
என்னை மட்டுமல்ல, தனது கிராம உத்தியோகத்தர் பிரிவிட்குட்பட்ட மற்றைய பெண்களையும இவர் இவ்வாறு கேவலமாக கதைக்கமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஏனெனில் பொது வெளியில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது இவ்வாறு கதைக்கும் ஒருவர், தனியாக தன்னிடம் வரும் பெண்களிடம் எவ்வாறு உரையாடுவார்?
ஆணுக்கு பெண் சரிநிகரென்ற விழுமியம் கொண்ட சமதர்ம சமூகத்தை படைக்க அரச உத்தியோகத்தர்கள் பங்களிக்க வேண்டும் என்பதும் பெண்களை கண்ணியப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அரச உத்தியோகத்தர்களின் கடமை என்கிற வகையில் இவர் அரச உத்தியோகத்திற்கு தகுதியானவரா? என்பதை உஙகள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.
என்னைக் காண்பதற்கு ஆவலாக இருப்பதாக கூறியிருப்பதால் உங்கள் முன்னிலையில் இவரைச் சந்தித்து பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்திருக்கிறேன். இவர் அரச சேவைக்கு அதுவும், கிராம உத்தியோகத்தர் போன்ற பொதுமக்களிடம் பொறுப்பு கூற வேண்டிய பதவிற்கு சிறிதும் தகுதியற்றவர் என்பதை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
இதற்கான ஒழுக்காற்று நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
உண்மையுள்ள,
(S.M.தர்ஷினி)
பிரதிகள்.
1. மாவட்ட செயலாளர் , மாவட்ட செயலகம், வவுனியா
2. செயலாளர் , பாதுகாப்பு அமைச்சகம், வித்யா மாவத்த, கொழும்பு 7.