தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிற்கிடையிலான சந்திப்பு மீண்டும் இன்று (30) இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஒன்றுசேர்ந்த...
தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிற்கிடையிலான சந்திப்பு மீண்டும் இன்று (30) இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஒன்றுசேர்ந்து, நினைவேந்தல் தடைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தியதுடன், கதவடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.
அதை குழப்ப துணைக்குழு தலைவர்கள் திலீபன் தொடர்பில் எதிர்மறையாக கருத்து தெரிவித்து வந்ததுடன், அதன் உறுப்பினர்கள் எதிர்ப்பு நடடிக்கையிலும் ஈடுபட்டனர். எனினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் கதவடைப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நினைவேந்தல் தடைக்கு எதிராக ஒன்று சேர்ந்த தமிழ் கட்சிகள் இன்று மீண்டும் ஒன்று கூடுகிறார்கள்.
நினைவேந்தல் விவகாரத்தில் 10 தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்திருந்தாலும், அதில் குறிப்பிட்ட தரப்பினரே செயற்பட்டிருந்தனர். மிகுதியானவர்கள் கடைசி நேரத்தில் டிமிக்கி விட்டு விட்டார்கள்.
10 கட்சிகளில் ஒன்றான தமிழ் தேசிய பசுமை இயக்கம் உண்ணாவிரதம் மற்றும் அதன் பின்னரான எந்த செயற்பாட்டிலும் பங்கேற்கவில்லை. மற்றைய கட்சிகள் சார்பில் சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் தவிர்ந்த ஏனைய எந்த எம்.பிக்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அனைத்து எம்.பிக்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், போராட்டத்தில் கலந்து கொள்ளாமலிருப்பதற்காகவே அவர்கள் கொழும்பில் தங்கியிருந்ததாக தெரிகிறது.
தனது அறிக்கைகளில் தலைவர் வே.பிரபாகரனை தம்பி என அடிக்கடி விளிக்கும், க.வி.விக்னேஸ்வரன், விடுதலைப் புலிகள் தொடர்புடைய எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமலிருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனடிப்படையில் நினைவேந்தல் தடைக்கு எதிரான எந்த போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை.
எம்.ஏ.சுமந்திரன் தரப்பும் போராட்டத்தை ரசிக்கவில்லை. அம்பாறையில் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் பகிரங்கமாக கேட்டதால், கதவடைப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டது. எனினும், சுமந்திரன் தரப்பில் யாருமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாததுடன்- ஆதரிக்கவுமில்லை.
தியாகி திலீபனை அஞ்சலிக்கும் உரிமைக்காக போராட்டம் நடத்துவதை சுமந்திரன் தரப்பிலுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டு, தற்போது சுமந்திரன் அணியில் செயற்பட்டு வரும் தி.பிரகாஷ் உள்ளிட்டவர்கள் யாரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தென்மராட்சியில் போராட்டம் நடந்தும், தமிழ் அரசு கட்சியின் சாவகச்சேரி கிளை தலைவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
பொதுமக்களிடம் தம்மை தேசியவாதிகளாக காண்பித்துக் கொண்டு, யதார்த்தத்தில் அதற்கு மாறாக நடக்கும் சொந்தக்கட்சிக்காரர்கள் பற்றி இன்று ஆராயப்படலாமென தெரிகிறது.
இப்படி “டபிள் அக்டிங்“ செய்பவர்கள் கட்சியின் முக்கிள பொறுப்பில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதால், கட்சி கட்டமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்து, அதனை சக கட்சிகளிற்கு இன்று அறிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோலே, ஏனைய கட்சிகளிலும் நடவடிக்கையெடுக்க கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.