அரசியலமைப்பின் 20வது திருத்தம் நாட்டிற்கு ஆபத்தானது என ஜனநாயகத்திற்கான ஒன்றினைந்த இளையோர் அணி தெரிவித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ந...
அரசியலமைப்பின் 20வது திருத்தம் நாட்டிற்கு ஆபத்தானது என ஜனநாயகத்திற்கான ஒன்றினைந்த இளையோர் அணி தெரிவித்துள்ளது.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனநாயகத்திற்கான ஒன்றினைந்த இளையோர் அணி இவ்வாறு
தெரிவித்துள்ளது.
குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்...
20 வது திருத்தம் நாட்டிற்கு ஆபத்தானது இதனை நிறைவேற்றும் பட்சத்தில் சிறுபான்மையின மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அதனை எதிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இந்த விடயத்திற்கு எதிர்ப்பினை வெளியிட முன்வர வேண்டும் அரசியல் தலைவர்கள் இந்த விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது காணப்படுகின்றது.
அதேபோல் பாராளுமன்றத்திலும் கட்சி பேதம் பாராது அனைவரும் 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றோம்.
அதேபோல் தற்போதைய கொரோணா சூழ்நிலையில் மக்களை ஒருங்கிணைத்து 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்வது சாத்தியமற்ற ஒரு விடயம். எனினும் மக்கள் மத்தியில் 20 வது திருத்த சட்டத்தின் தீமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது பிரதான நோக்கமாகும் அதேபோல் நாங்கள் இளைஞர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மூன்று விடயங்களை செயற்படுத்தவுள்ளோம்.
20 வது திருத்தம் தொடர்பாக புதிய முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டு மக்கள் கருத்து பகிர்வுடன் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களை 20வது திருத்தசட்டம் அதிகளவில் பாதிக்கும் என்பதனால் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் இனம்,மொழி மற்றும் மதம் பார்க்காது பாராளுமன்றத்தில் 20வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக செயற்படவேண்டும்.
மக்கள் தீர்ப்புக்கு இது வருமாக இருந்தால் அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்.
போன்ற விடயங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது செயற்பாடாக அமையவுள்ளது. இன்றிலிருந்து இந்த செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளோம் எனவும் தெரிவித்தனர்.