சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில், மீனவ, சமுத்திர மற்றும் கடற்படை பொறியியல் துறைகளில் தொழில்சார...
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில், மீனவ, சமுத்திர மற்றும் கடற்படை பொறியியல் துறைகளில் தொழில்சார் மற்றும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவுறுத்தினார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக மற்றும் மனித வள மேம்பாடு தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கலமெடியான பிரதேசத்தில் நிறுவி, அபிவிருத்தி செய்வதற்கு அறிவுறுத்திய பிரதமர், அதன் தொழில்நுட்ப பீடத்தை தற்போது இயங்கிவரும் மட்டக்குளிய பிரதேசத்தில் அப்பிரதேசத்தை மையமாகக் கொண்டு அபிவிருத்தி செய்யுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமையவே இலங்;கை சமுத்திர பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அவரினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய மீனவ மற்றும் கடற்படை பொறியியல் நிறுவனம் 2014ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க சட்டத்திற்கமைய உத்தியோகப்பூர்வ பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய இலங்கை சமுத்திர பல்கலைக்கழகமொன்றை நிறுவும் வகையில் தான் கடற்றொழில் அமைச்சராக காணப்பட்ட போது கலமெடியாவ பிரதேசத்தில் இடமொன்று வழங்கப்பட்ட போதிலும், கடந்த அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர்களினால் சமுத்திர பல்கலைக்கழகத்தினை தங்களது அதிகார வரம்பிற்குள் கொண்டு செல்வதற்கு முயற்சித்தமையால் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி கற்கை நெறிகளை முன்னெடுத்து செல்வதற்கு ஆய்வுகூடம், விரிவுரை அரங்கு, விளையாட்டு அரங்கம் போன்றே மனித வளத்திற்கான தேவையும் காணப்படுவதாக இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நளின் ரத்நாயக்க இதன்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
வரையறுக்கப்பட்ட இட வசதிகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி கற்கை நெறிகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர், அந்த சிரமங்களை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தினார்.
அரசாங்கத்தின் புதிய நோக்கின் கீழ் மீனவ, சமுத்திர விவகார, கடற்படை பொறியியல் மற்றும் கடற்படை அறிவியல் துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைக்கான விநியோகத்தை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் (சட்டம்) கணேஷ் தர்மவர்தன, இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நளின் ரத்நாயக்க உள்ளிட்ட சமுத்திர பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.