புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின்...
புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2 ஆவது குடியரசு அரசியல் யாப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை இந்த சட்டமூலம் மீறுகிறது. ஆகையால் இது முற்றாக நிராகரிக்கப்படவேண்டும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினோம்.
அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில உறுப்புரைகளை மீறுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
நீதிமன்றிலே குறித்த சட்டமூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் உயர்நீதிமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா என்பதை மட்டும் தான் நீதிமன்றத்தினால் தெரிவிக்க முடியும் என்று அரசியலமைப்புச் சொல்கிறது.
அரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி மாற்றம் செய்யமுடியாத சரத்துக்களில் பிரதானமானது ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு கொடுப்பது சம்பந்தமானது.
2ஆவது குடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவர் தன்னுடைய பதவிக்காலத்தின் போது, அவருடைய எந்தச் செயலையும் நீதிமன்ற சவாலுக்கு உட்படுத்த முடியாது என்கிற அரண் போடப்பட்டது. அந்தக் காப்பரண் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சற்று விலக்கப்பட்டது.
அதன் மூலம் ஜனாதிபதி விடுகின்ற தவறுகள் அல்லது செய்யாமல் விடப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்திலே அடிப்படை மனித உரிமை மனுத் தாக்கல் செய்யமுடியும் . கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்புத் தொடர்பில் மைத்திரிபால சிறீசேன மேற்கொண்ட அறிவிப்பினை நீதிமன்றம் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினை அடிப்படையாக் கொண்டே மைத்திரிபாலவுக்கு எதிரான தீர்ப்பினை வழங்கியதாக இருந்தது.
தற்போது 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மீண்டும் 2 ஆவதுகுடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவருக்கு மீண்டும் ஏற்படுத்த முயலும் காப்பரணுக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
நீதியான தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்ற சரத்தினை மாற்றுவதற்கும் நீதிமன்றம் அனுமதி மறுப்புத் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு, ஊடகங்களுக்கு கொடுக்கிற அறிவுரைகளை பின்பற்றப்படவேண்டும் என்றும் பொது உத்தியோகத்தர்களுக்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றாவிட்டால் அவை குற்றமாகும் என்பதை மாற்றமுடியாது என்றும் அவ்வாறு மாற்றுவதாக இருந்தால் அதுவும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
20 ஆவது திருத்த உத்தேச சட்டமூலத்தின்படி ஒரு வருடத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்று முன்மொழியப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சிக்காலத்தில் அரைவாசிக்காலத்தின் பின்னரேயே அதாவது இரண்டரை வருடத்தின் பின்னரேயே கலைக்கமுடியும் அதற்கு முன்பதாக கலைப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருந்தபோதிலும் நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் நீதிமன்றங்களாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதி நியமனங்கள் செய்கின்றபோது அதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபையிலே பெறவேண்டும் என்பது நீக்கப்பட்டு பாராளுமன்ற சபை சில கருத்துக்களைச் சொல்லலாம் என்றும் ஜனாபதி தான் விரும்பியவர்களை நியமிக்கலாம் என்றும் கொண்டுவரப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனை மூன்றில் இரண்டு பெரும்பாமை பலத்துடன் நிறைவேற்றலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று தெரிவித்த அவர் அவ்வாறான ஆணைக்குழுக்களை சுயாதீன ஆணைக்குழுக்களாக அழைக்க முடியாது என்றும் தெரிவித்தார். இது ஜனாதிபதிக்கான அதிகாரத்தை அதிகரிப்பதாகவே அமையும் என்பதால் இதற்கு எங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கை தொடரும்.
அதேவேளை இந்தத் தீர்ப்புக்கு பிறகு அரசாங்கம் என்ன தீர்மானத்தை எடுக்கப்போகிறது என்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற விடயங்களைக் கைவிட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்களை மட்டும் முன்னெடுப்பார்களா? அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிற விடயங்களையும் கூட நிறைவேற்றி, அந்தப் பகுதிகளையும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்களா? என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் அறிவித்த பின்னர் தான் இதனை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் குறித்த உத்தேச திருத்த வரைவுக்கு எதிரான நிலைப்பாடு உறுதியானதாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் எதிராக வாக்களிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.