தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தாமே...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தாமே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ்பேசும் சமூகத்தின் நீதிக்கான பேரணி பல்வேறு தடைகளைத் தாண்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிகண்டியில் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் இருந்து நிறைவு வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் த.கலையரசன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர். இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை நேற்று முன்தினம் இரவு திடீரென மீளப்பெறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எதற்காக சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட எஸ்டிஎவ் பாதுகாப்பை தாமே நீக்கியதாகவும் எதற்காக நீக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். ' விடுதலைப்புலிகளிடம் இருந்து சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது' என அமைச்சர் தெரிவித்தார்.
2013ம் ஆண்டு முதலே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்யும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதும் 6க்கும் அதிகமான வழக்குகள் நடைபெற்றுவருகின்றதுடன் சந்தேக நபர்கள் பலர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.