தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந...
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும்.
வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலையை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அண்ணன் தம்பி என்று நாட்டாமைத்தனம் வேண்டாம். எங்கள் மக்கள் தற்போது இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள்
அவன் பிழை இவன் பிழை என நாம் கூறுகின்றோம். மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற இனத்தை விடுதலை செய்கின்ற விடயங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது ஆலோசனைகளை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ண வேண்டும். தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒரு காலம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
22 இல் இருந்து தற்போது 10 ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறி உள்ளது. ரணில் விக்ரமசிங்க பற்றி உங்களுக்கு தெரியும். விடுதலைப் புலிகளை உடைத்தவர். அவருடைய ராஜதந்திரத்தை பற்றி சொல்கின்ற போது நரித் தந்திரம் என்பார்கள். அந்த தந்திரமே விடுதலைப்புலிகளையும் பிரித்தாண்டது. அந்த தந்திரத்தையே நாங்கள் அண்மையில் பேசுகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டார். கூட்டமைப்பில் சிலர் தனக்கு வாக்களித்தார்கள் என கூறினர். சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் அதனை எதிர்த்து கதைத்தார்கள். வெளியில் வந்த போது ரணில் இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி வெளியானது
ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலரின் கருத்துக்கள் இருந்தது.
அதனால் யாருக்கு வெற்றி என்று சொன்னால் அது ரணிலுக்கே வெற்றி. நாகரீகம் கருதி நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மாநாடு என்பதால் நான் பெயரைச் சொல்லி விரும்பவில்லை. இது யாருக்கு நட்டம். ஜனாதிபதி சரியாக காயை நகர்த்தி இருக்கின்றார். அதனை நாங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களுடைய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது. இருக்கின்றது. இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது. பலமாக 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்து செயல்படுகின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றார்.