இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் பல அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த நட்டம் சுமார் 4,000 பில்லியன் ரூபாவாக இருக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக...
இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் பல அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த நட்டம் சுமார் 4,000 பில்லியன் ரூபாவாக இருக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதி, நாடு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல தீவிரமான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.
“இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாம் பல தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதன் கீழ், நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணியை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம். பல தசாப்தங்களாக இந்த நிறுவனங்களின் இழப்பு அரச வளங்கள் என்ற போர்வையில் பொதுமக்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமக்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் இழப்பு மக்கள் மீது சுமத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் பல அரச நிறுவனங்களின் மொத்த இழப்பை நான் குறிப்பிடுகிறேன். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 1,057 பில்லியன் ரூபாவும், இலங்கை மின்சார சபைக்கு 261 பில்லியன் ரூபாவும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 799 பில்லியன் ரூபாவும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4,000 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறேன். இந்த சுமையை இனி மக்கள் மீது சுமத்த முடியாது. எனவே, நாங்கள் இந்த நிறுவனங்களை மறுசீரமைத்து, அவை நாட்டிற்கு சுமையாக இல்லாத சூழ்நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.