ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆதரவா...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.
அத்துடன், ப்ரான்ஸ், ஜேர்மன் நெதர்லாந்து கொரியா யுக்ரைன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் cள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெறும் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் இடம்பெற்ற ஊடாடல் பொது நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டிருந்தார்.
அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இறையாண்மை கொண்டதொரு நாட்டில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றது எனவும், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாது என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், உள்நாட்டு பொறிமுறையின் கீழ் தீர்காண்பதே பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது வழக்கமான அமர்வில் முன்வைக்கப்பட்ட 51/5 என்ற இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை நிராகரிக்க வாக்களிக்குமாறு அமைச்சர் அலி சப்ரி உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், தீர்மானத்தின் 8 ஆவது சரத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்த இந்தியா அண்டை நாடு என்ற வகையில், 2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு உதவி செய்துவருவதாக தெரிவித்தது.
அதேநேரம், தமிழர்களின் இறையாண்மை மற்றும் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையில் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபை முறைமையை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.