யாழ்.சாவகச்சோி பிரதேச செயலகத்தில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெறுவதற்கு மக்கள் 2 ஆயிரம் ரூபாய் ஆட்டோவுக்கு செலவிட்டே வந்ததாக மக்கள் ஆதங்கம் ...
யாழ்.சாவகச்சோி பிரதேச செயலகத்தில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெறுவதற்கு மக்கள் 2 ஆயிரம் ரூபாய் ஆட்டோவுக்கு செலவிட்டே வந்ததாக மக்கள் ஆதங்கம் தொிவித்திருக்கின்றனர்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் தொிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 2 ஆம் கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், தெல்லிப்பளை, நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், சங்கானை, மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேசங்கள் தெரிவானது.
இவற்றில் 18918 பயனாளிகளுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் முதலாவது கொடுப்பனவாக 15000 ரூபா வழங்கப்பட்டது.
அதற்கான இரகசிய இலக்கம் குறுந்தகவல் ஊடாக தொலை பேசிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், 2 கட்டக் கொடுப்பனவாக 5000 ரூபா இம்மாதம் 20 ஆம் திகதி முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் சிலருக்கு மட்டுமே குறுந்தகவல் கிடைத்துள்ளது. அதைனையடுத்து குறுந்தகவல் கிடைக்கப்பெறாதவர்கள் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு நேற்று அழைக்கப்பட்டனர்.
அதற்கமைய 500 மேற்பட்ட பயனாளிகள் வருகைதந்திருந்தனர். அதில் அதிகமானவர்கள் வயோதிபர்களாக இருந்தமையால் அவர்கள் போக்குவரத்து மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக 5000 ரூபா கொடுப்பனவைப்பெற 2000 ரூபா முச்சக்கர வண்டிக்கு கொடுத்து வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.