தற்போது இருக்கின்ற தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத் தர முடியாது. தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட விரும்பினால் அவர்கள்...
தற்போது இருக்கின்ற தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத் தர முடியாது. தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட விரும்பினால் அவர்கள் போகட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் சமத்துவ கட்சியின் வன்னிக்கான அலுவலகத் திறப்பு விழாவில் அண்மையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனித்தனித் கட்சிகள் எல்லாம் சாபக்கேடு. தமிழ் தலைவர்கள் தீர்வைப் பெற்று தருவர்கள் என தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு போதும் இல்லை. இப்பொழுது இருக்கும் தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியாது. இப்போது இருக்கிற சிங்கள தலைவர்களாலும் பேச்சின் மூலம் தீர்வைத் தர முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பேசுகின்றார். கபடத் தனத்தோடு தான் பேசுகின்றார். பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்த பேச்சுக்கு திகதி தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தமிழர் தரப்பில் இருந்து ஒரு கட்சியை வலிந்து இழுத்து தனித்து பேசுகிறார்கள். தமிழர் தரப்பாக ஒரு தரப்பாக நின்று அரசாங்கத்துடன் பேச வேண்டும். அந்த பேச்சு தான் வெற்றியளிக்கும். பல தரப்புகளாக சென்றால் தீர்வைப் பெற முடியாது. கட்சிகள் பிரிவது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு. சமத்துவக் கட்சியை கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏன் இணைந்து செயற்படக் கூடாது என கேட்கின்றேன். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நீக்கள் கூட்டமைப்பிலும் அங்கத்துவம் பெற முடியும். ஒற்றுமையை தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். ஒற்றுமைப்பட்டால் காலம் தாழ்த்தி என்றாலும் தீர்வைப் பெற முடியும்.
மக்களது பிரச்சனைகளை எங்களால் தீர்க்க முடியாது இருகின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இதற்கு நான் வெட்கப்படுகிறேன். பொருளாதார நெருக்கடிக்கு கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. நாங்கள் எதிர்கட்சியாக இருந்து அரசை விமர்சித்ததன் காரணமாக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் துரோகம் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.