யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு , தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணி...
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு , தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் முன்பாக , தனது வாகனத்தை நிறுத்தி விட்டு , வர்த்தக நிலையத்திற்கு சென்ற நபரிடம் பின் தொடர்ந்து வர்த்தக நிலையத்தினுள் சென்று , வாகன தரிப்பிட கட்டணத்தை தருமாறு கட்டணம் அறவிட நியமிக்கப்பட்ட நபர் கோரியுள்ளார்.
அதன் போது , கடையில் பணியாற்றும் நபர்கள் , கடைக்குள் வந்த வாடிக்கையாளருக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். அதன் போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து அந்நபர் மேலும் ஒரு கட்டணம் அறவிடும் நபரை கடைக்கு அழைத்து , கடையில் வேலை செய்யும் நபர்களுடன் , தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் , வீதியில் நின்று தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு முதல்வர் சென்ற வேளை தர்க்கத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து விலகி சென்று இருந்தனர்.
அதேவேளை , வாகன தரிப்பிட கட்டணம் அறவிட குத்தகைக்கு எடுத்த நபரினால் வேலைக்கு அமர்த்தப்பட்ட நபர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் மாநகர முதல்வருக்கு கிடைத்த வண்ணம் இருந்தமையால் , கடந்த வாரம் குத்தகைதாரரை அழைத்து கடுமையாக எச்சரித்து , இனி வரும் காலங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் , குத்தகையை இரத்து செய்யவோம் எனவும் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் இன்றைய சம்பவத்துடன் குத்தகை தாரருடனான ஒப்பந்தத்தை யாழ்.மாநகர சபை முடிவுறுத்திக்கொள்கிறது.
இனிவரும் காலங்களில் வாகன தரிப்பிட கட்டணங்களை யாழ்.மாநகர சபையே அறவிடும் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.மாநகர சபை முதல்வர் இன்றைய தினம் நள்ளிரவுடன் தனது பதவியை இராஜினாமா செய்துக்கொள்ளும் நிலையில் , வாகன தரிப்பிட கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரருடனான ஒப்பந்தத்தை முடிவுறுத்தி , ஒப்பந்தத்தை இரத்து செய்ய கையொப்பம் இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.