வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரனை கடமை செய்ய விடாமல் சிலரின் அதீத தலையீடுகள் இருந்தமை காரணமாக கல்வி அமைச்சர்களின் செயலாளர் பதவிய...
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரனை கடமை செய்ய விடாமல் சிலரின் அதீத தலையீடுகள் இருந்தமை காரணமாக கல்வி அமைச்சர்களின் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்படவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய கிடைத்துள்ளது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் ஆசிரியர் நியமனத்திலும் அதிபர் நியமனத்திலும் வெளி மாவட்டம் செல்லாத சுமார் 44 பேர் 15 வருடங்களுக்கு மேலாக யாழ் மாவட்டத்திலே தங்கி உள்ளனர்.
இவர்களை இடமாற்றுவதற்காக கடந்த வருடம் நடுப்பகுதியில் முதற்கட்டமாக 22 பேரை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் மேற்கொண்டார்.
22 அதிபர்களின் 3 பெண் அதிபர்கள் தமக்கு வழங்கப்பட்ட வெளி மாவட்ட இடமாற்றத்தினை தடுப்பதற்காக மூன்று கணவன்மார்கள் இணைந்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு உள நீதியான அச்சுறுத்தலை விடுத்ததாக அறிய முடிகிறது.
குறித்த இடமாற்றத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியரின் மனைவி யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரின் மனைவி மற்றும் வைத்தியத்துறையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் மனைவி குறித்த இடமாற்றத்திற்குள் அகப்பட்டமையே இடமாட்டத்தை நிறுத்த வேண்டிய நிலைக்குத் காரணம் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அதிபர்கள் செல்லாத நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் 200க்கும் மேற்பட்ட பாடசாலைகள் நிரந்தர அதிபர் இல்லாமல் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அண்மையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சேவா சங்கம் பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை உரிய முறையில் நிரப்புமாறும் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அதிபர்கள் ஆசிரியர்களை தமது சொந்த இடங்களுக்கு அனுமதிக்குமாறு கோரி எழுத்து மூலமாக கடிதத்தை வழங்கினர்.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வெளி மாவட்டங்களில் கடமை ஆற்றி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு சிலரின் மனைவிமார்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கல்வி அமைச்சின் செயலாளர் நிர்பந்திக்கப்பட்டதன் பின்னணியில் அவருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டது என்ற சந்தேகங்கள் எழுகின்றது.