தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்ட...
தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீ காந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இதனடிப்படையில் பல்வேறுபட்ட தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் களமிறங்க தீர்மானித்துள்ளன.
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பனவே புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.
யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது.
ஆனாலும் கட்சிகளுக்கிடையே பல்வேறு சின்னங்கள் பற்றி ஆராயப்பட்டாலும் பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றது.
இன்றைய கூட்டத்தில் பெரும்பாலும் உடன்பாடு எட்டப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை கூட்டணிக்கான ஒப்பந்தம் எழுதப்படும் என அறிய முடிகிறது.