தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாள...
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும் பனியுடன் போராடி வருகின்றனர்.
நே்றறு அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும் குறைந்தது 3,500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அனர்த்த வலயத்தில் உள்ள பலர் கட்டடங்களுக்கு திரும்புவதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் நேற்று அதிகாலை 04:17 (01:17 GMT) மணிக்கு காசியான்டெப் நகருக்கு அருகே 17.9 கிமீ (11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், GMT 01:17 அளவில் 7.6 மெக்னிடியூட் அளவிலான மற்றுமொரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சர்வதேச நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தங்களது மீட்பு பணியாளர்கள் அனுப்பி வருகின்றன.
இதன்படி, அமெரிக்கா இரண்டு மீட்பு குழுக்களை துருக்கிக்கு அனுப்பியுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துருக்கி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் பிரித்தானியா 76 பேர் கொண்ட மீட்புக்குழுவை துருக்கிக்கு அனுப்பியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு மீட்பு பணியாளர்களை அனுப்புவததாக இஸ்ரேலும் அறிவித்துள்ளதுடன் மேலும் பல நாடுகள் தங்களது உதவிகளை வழங்கியுள்ளன.
துருக்கியின் பல பகுதிகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் சர்வதேச மீட்பு பணியாளர்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நில அதிர்வு காரணமாக விமான நிலையங்களின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் நிலஅதிர்வில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.