தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து கூட்டமைப்பில...
தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியே பிரிந்து சென்றதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நல்லூர் பிரதேச சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது.
இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த பிரிவின் பின்னர் ஒற்றுமையாக செயற்படுவதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் ஏன் எடுக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும், ஆனால் கடந்த 15 வருடங்களாக அதற்கான முயற்சியை தாம் தொடர்ந்து எடுத்து வந்திருந்ததாக குருசுவாமி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கிணைந்த தாயகப் பிரதேசத்திலே சுயநிர்ணய பண்புகளுடன் கூடிய ஒரு ஆட்சி அலகை உருவாக்குவதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணத்தில் முடங்கி மாவட்டத்தில் தொகுதியில் முடங்கி இறுதியாக வட்டாரத்தில் வெற்றி பெறுவதற்காக சிந்திக்கின்ற சிறுமைப்பட்ட ஒருசிலர் அதனை நிர்மூலமாக்குவதற்கு முயற்சித்திருந்தாலும் அது வெற்றியளிக்கவில்லை என குருசுவாமி சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.