சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்ற...
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே,
அன்பான நாட்டு மக்களே,
உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே,
அன்புள்ள குழந்தைகளே,
நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தி, நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீழப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்.
75 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சுதந்திரம் பெற்றபோது, புகழ்பெற்ற “லண்டன் டைம்ஸ்” நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் இவ்வாறு கூறியது:
“இலங்கை விரைவில் கீழத்தேயத்தின் சுவிட்சர்லாந்தாக மாறுவதைக் காண்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” வேறு எந்த கீழத்தேய நாட்டைப் பற்றியும் அவர்கள் அத்தகைய எதிர்பார்ப்பை கொண்டிருக்கவில்லை.
ஆனால் தற்பொழுது எமக்கு என்ன நேர்ந்துள்ளது?
இன்று நாம் வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறானதொரு பாரதூரமான நிலையை நாம் எதிர்கொண்டதில்லை.
நமக்கு ஏன் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது? இந்த நிலைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
நாம் உண்மையைப் பேசுவோம்.
இந்த நிலைக்கு நாம் அனைவரும் குறைவாகவோ அதிகமாகவோ பொறுப்புக் கூற வேண்டும். நாம் யாரும் விரல் நீட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்ல முடியாது.
நாம் ஆரம்பத்திலிருந்தே தவறு செய்தோம். அந்த தவறை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. பாடுபட்டோம். ஆனால் நூறு சதவீதம் சரி செய்ய முடியவில்லை.
சுதந்திரம் பெறுவதற்கு டி.எஸ். பின்பற்றிய வழிமுறை, இலங்கையர் அனைவரையும் ஒன்றிணைப்பதாகும். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என யாராக இருந்தாலும் இலங்கையர்களாக நாம் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என அவர் அன்று தெரிவித்தார்.
ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு நாங்கள் பிளவுபட்டோம். இனம், மதம், பிரதேச ரீதியாக பிரிந்தோம். ஒருவரையொருவர் குறித்து சந்தேகம், வெறுப்பு ஏற்படும் வரை பிரிந்தோம். பல்வேறு குழுக்கள், அதிகாரத்தைப் பெறவதற்கு இந்தப் பிரிவைப் பயன்படுத்தின. அதிகாரத்திற்காக மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தினர். நாம் அவர்களை நிராகரிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு அதிகாரம் அளித்தோம்.
அரசியலில் உண்மையைச் சொல்லாமல் பொய் சொன்னார்கள். உண்மையைச் சொன்ன அரசியல்வாதிகளை மக்கள் நிராகரித்தனர். நாட்டின் உண்மை நிலையைச் சுட்டிக்காட்டி அதற்கான பரிகாரம் தேடுபவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பொய்களால் மகிழ்விப்பவர்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைத்தது. நாம் வாக்குறுதி அரசியலில் சிக்கிக்கொண்டோம். எங்களுக்குச் சொந்தமில்லாத கடன் வாங்கிய வளங்களை நம்பியிருந்தோம்.
மேலும் மேலும் கடன் வாங்கினோம்.
“அரசாங்கமென்பது வளங்களின் ஊற்று” என்ற மனப்பாங்கை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டோம். அந்த ஊற்றுக்களில் இருந்து கிடைக்கும் பல்வேறு வளங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதே ஆட்சியாளர்களின் கடமை என்று பலரும் நினைத்தனர்.
அதன்படி தொழில்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வளங்கள் விநியோகிக்கப்பட்டன. உபகரணங்கள் வழங்கப்பட்டன. பணமும் விநியோகிக்கப்பட்டது.
நம்மில் பெரும்பாலானோர் வாக்களித்தது நாட்டுக்காக அல்ல. எங்களுக்கு தொழில் பெற பிள்ளையைப் பாடசாலையில் சேர்ப்பதற்கு. விலைமனுக் கோரலுக்கு அனுமதி பெற நாம் வாக்களித்தோம். தனிப்பட்ட ஆதயத்திற்காகவே நாம் தேர்தல் வேட்பாளர்களுக்காக பணியாற்றினோம்.
நம்மில் பெரும்பாலானோர் தேர்தலில் போட்டியிட்டது கூட நாட்டுக்காக அல்ல. தங்களுக்காக. அதிகாரத்தை பெறவும் சலுகைகளை அனுபவிக்கவும் மேலும் சம்பாதித்துக்கொள்ளவும் தேர்தலில் போட்டியிட்டனர்.
நாம் வாக்குறுதிகளில் சிக்கிக்கொண்டோம். கோசங்களில் சிக்கினோம். இவை அனைத்தினதும் விளைவாக நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடையத் தொடங்கியது. அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கோசங்களில் தெரிவிக்கப்பட்டவற்றை உறுதிப்படுத்தவும் நாங்கள் மேலும் மேலும் கடன் வாங்கினோம்.
நாம் அதிகம் அதிகமாக முதலீட்டுக்காக அல்லாமல், நுகர்வுக்காகத்தான் கடன் வாங்கினோம். “கடன் முதலீட்டிற்காக அன்றி நுகர்வுக்காக அல்ல” என்று புத்தரின் போதனைகள் கூறுகின்றன. பௌத்தத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு புத்தரை வணங்கி பௌத்த தர்மத்தை தாண்டிச் சென்றுவிட்டோம்.
சிங்கப்பூரை மீளக் கட்டியெழுப்புவது பற்றி அறிந்து கொள்வதற்காக இலங்கை வந்த லீ குவான் யூ பல வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு கூறினார்.
“தேவையில்லாமல் அரசியலுக்கு முன்னுரிமை அளித்தமையே உங்கள் நாட்டில் இந்த நிலை ஏற்பட காரணம்.” உங்கள் நாட்டை முன்னுதாரணமாக கொண்டிருந்தால் சிங்கப்பூர் அழிந்திருக்கும்”.
உண்மையில், நாம் இப்போது அழிவு நிலையை நோக்கி சென்றுள்ளோம். இந்த காயத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்புபவர்களும் உள்ளனர். ஆனால் நான் அதனை விரும்பவில்லை. ஒரு சத்திரசிகிச்சை செய்து இந்த காயத்தை சுகப்படுத்திக் கொள்வோம். இது கடினமானது. வேதனையானது. கஷ்டமானது.
ஆனால் அந்த சோகத்தையும் வேதனையையும் சிறிது காலம் அனுபவித்தால், காயத்தை முழுமையாக குணப்படுத்த முடியும்.
சில அரசியல் கட்சிகள் சுட்டிக் காட்டும் குறுக்குவழிகளால் இந்த நெருக்கடியிலிருந்து எமக்கு மீள முடியாது.
இந்த நெருக்கடியை சமாளித்து உண்மையான பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை அடைய வேண்டுமானால், நாம் செல்ல வேண்டியது ஒரே ஒரு வழிதான். இந்தக் குழியிலிருந்து ஏறுவதற்கு எமக்கு ஒரே ஒரு ஏணி தான் உள்ளது. அரசியல் நலன்களுக்காக இந்த ஏணியை ஒதுக்கித் தள்ளினால், நமக்கு ஒரு நாடு இருக்காது, நமக்கு நாளை இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாம் இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தையும் ஆபத்தையும் இதற்கு முன்னரும் நான் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் முன்கூட்டியே கூறியுள்ளேன்.
இந்த இக்கட்டான சூழலை நாம் விருப்பமில்லாத நிலையிலும் கூட எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் நலனுக்காக நாம் அந்த இக்கட்டான நிலையை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் இனிப்புப் பேச்சுகளால் இந்நிலைக்குத் தீர்வு கிடைக்காது.
இலவசக் கல்வியினால் இந்நாட்டில் பெருமளவிலான மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்கத்தினராக மாறினாலும் இன்று அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத நாடாக மாறியுள்ளது. தோளோடு தோள் நின்று உழைக்க வேண்டிய இளைஞர்கள் இன்று கடவுச் சீட்டுகளைப் பெற வரிசையில் நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். அதை நாம் மாற்ற வேண்டும்.
அப்படியானால், நாம் இந்தப் பொருளாதாரத்தை நவீனமயமாக்கி, உலகிற்கு திறந்துவிட வேண்டும். மக்களை ஏமாற்றி அவர்களை நிரந்தர ஏழைகளாகவும், தங்கிவாழ்பவர்களாகவும் மாற்றும் ஊழல் அரசியல் வாதத்தையும் தோற்கடிக்க வேண்டும்.
இந்நாட்டு இளைஞர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “சிஸ்டம் சேன்ஞ்” என்ற முறைமை மாற்றம் இது தான்.
அதற்காக எனது அரசாங்கம் புதிய சீர்திருத்தப் பாதையில் பிரவேசித்துள்ளது. அதற்காக எடுக்கப்படும் முடிவுகள் சிலநேரம் வேதனை தருவதாக இருந்தாலும், இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர அந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டுமாயின், நாம் குறுகிய அரசியலில் இருந்து விலகிச் செல்ல வேண்டும். நாம் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
சவாலை வெற்றிகொள்ளும் பாதையை வலுப்படுத்த நம்மால் முடிந்த அளவு பங்களிக்க வேண்டும். அனைத்து வேற்றுமைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கையர்களாக நாம் அனைவரும் முன்னேறிச் செல்ல வேண்டும்.
அதன் மூலம் வலுவான புதிய பொருளாதாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான அடிப்படைப் பணிகளும், அடித்தளமும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான கடினமான பணிகளை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம். விரைவில் அவர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதால் மட்டும் எம்மால் திருப்தி அடைய முடியாது. ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்த அரசியல் முறைமை, பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், அரச பொறிமுறை ஆகிய அனைத்து துறைகளும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும்.
இந்த மாற்றம் நாட்டுக்கும் நமக்கும் நல்லதாக அமைய வேண்டும். புதிய முறைமையில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கருத்துக்களுக்கும் பிரதிநிதித்துவங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இந்த முறைமை மாற்றத்துக்கு அவசியமான பல்வேறு சட்ட ஏற்பாடுகளை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
அது போன்றே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் விசேடமான பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கான அமைச்சரவை உபகுழுவை ஏற்கனவே நியமித்துள்ளோம்.
அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்கப்படும். அவர்களது கருத்துகளின்படி, அந்தப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.
காணிகளை மீளக் கையளித்தல், கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.
அது போன்றே ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
நான் முயற்சிப்பது மேலோட்டமாக தெரிகின்ற நோய்க்கு வலி நிவாரணிகளை வழங்க அல்ல. நோயின் மூலக்காரணியை நிவர்த்தி செய்யவே முயற்சிக்கிறோம். அது சிரமமானது.மிகவும் கடினமானது. எனினும் நாம் செல்ல வேண்டிய ஒரே வழி அதுதான்.
நான் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து எனக்கு எடுக்க நேரிட்ட பல தீர்மானங்கள் பிரசித்தமான தீர்மானங்கள் அல்ல என்பதை நான் அறிவேன்.
ஆனால் அந்தத் தீர்மானங்களால், இன்று இந்த நாட்டின் எந்தக் குடிமகனும் எரிபொருள் வரிசைகளில் நீரின்றி இறக்கவில்லை. சமையல் எரிவாயு இல்லாமல் பட்டினியில் இல்லை. உரம் இல்லாமல் சாபம் இடவில்லை.
எனவே, அராஜக அரசியல் சக்திகள் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும், இந்த நாட்டை நேசிக்கும் பெரும்பான்மையான மக்களுடன் இணைந்து இந்தப் புதிய சீர்திருத்தத் திட்டத்தை முன்னெடுப்பேன்.
சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மனதில் கொண்டு ஒற்றுமையுடன் திட்டமிட்டு முன்னேறினால் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த நாடாக மாறலாம்.
உலகில் வேறு எந்த நாட்டிடமும் கையேந்தாத அபிவிருத்தி அடைந்த நாடாக மாறலாம். உண்மையான சுதந்திரத்தையும் அடைய முடியும்.
நமது பிள்ளைகள் உலகுடன் போட்டி போடும் வகையில் புதிய நாட்டை உருவாக்குவது நம் அனைவரதும் பொறுப்பாகும். எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தை வெற்றிகொள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் ஒன்றுபடுவோம்! கைகோர்ப்போம்!
அவ்வாறு கைகோர்த்து எதிர்வரும் 25 ஆண்டுகளுக்காக நாம் தயாரித்துள்ள திட்டத்திற்கமைய ஒன்றுபட்ட பயணத்தை மேற்கொள்வோம்.
அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கும் ஏற்ப அந்தத் திட்டத்தை மேம்படுத்துவோம். மேலும் வலுப்படுத்துவோம். அவற்றை மேலும் முறைமைப்படுத்தி நெறிப்படுத்துவோம்.
இந்த முயற்சியில் இணைந்து கொள்ள வேண்டியது, இலங்கை வாழ் மக்களான நாம் மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கையர்களும் இந்தப் பயணத்திற்குத் தோள்கொடுக்க வேண்டும். ஒன்றிணைய வேண்டும். இந்த இலக்குகளை அடைய அனைவரும் முடிந்தவரை பங்களிக்க வேண்டும்.
எனவே நாம் அனைவரும் ஒன்றாக முயற்சி எடுப்போம். ஒற்றிணைந்து அர்ப்பணிப்போம்.
ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒன்றுபடுவோம்.
நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2048 ஆம் ஆண்டின்போது எமது நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவோம்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
04-02-2023