நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய ரயில் சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளைய...
நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய ரயில் சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி நாளை (15) காலை அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி காலை 5.00 மற்றும் 5.45 மணிக்கும், சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 4.50 மற்றும் 5.50 மணிக்கு இரண்டு ரயில் சேவைகளும் இயக்கப்படவுள்ளன.
ரம்புக்கனையில் இருந்து காலை 5.25 மற்றும் 5.57 மணிக்கும், கனேவத்தையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கும், மஹவயில் இருந்து 4.45 மணிக்கும், கண்டியில் இருந்து 5.00 மணிக்கும் கொழும்புக்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கரையோரப் பிரதேசத்தில் பெலியத்தவிலிருந்து அதிகாலை 4.15 மணிக்கும், காலியிலிருந்து 5.00 மணிக்கும், அளுத்கமவில் இருந்து 6.00 மணிக்கும், தெற்கு களுத்துறையிலிருந்து கொழும்புக்கு காலை 7.00 மணிக்கும் ரயில்கள் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, நாட்டின் பொது ஒழுங்கை பேணுவதற்கும், இடையூறுகளைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள், தங்களின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் உள்ளடக்கும் வகையில் போதிய பாதுகாப்பை வழங்குவதுடன், பொறுப்பான கண்காணிப்பு அதிகாரியுடன், அதிகாரிகள் குழுவை முக்கிய நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளிக்கும் போதும், சேவையை முன்னெடுக்கும் போதும் அவர்களுக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயிலை இயக்கும் போது கல் வீச்சு அல்லது ஏதேனும் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளைத் தடுக்க தகுந்த பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சிறப்பு முன்னேற்பாடுகள் இன்று (14) நள்ளிரவு முதல் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக அமுல்படுத்தப்படவுள்ளது.