வடமாகாண இறைவரித் திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்ட பெரும்பான்மையின உயர் அதிகாரிக்கு சேவை நீடிப்பு வழங்கினால் வடமாகாண சபையை முடக்கிப் போராடுவோம...
வடமாகாண இறைவரித் திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்ட பெரும்பான்மையின உயர் அதிகாரிக்கு சேவை நீடிப்பு வழங்கினால் வடமாகாண சபையை முடக்கிப் போராடுவோம் என தமிழ் மக்கள் பண்பாட்டு பேரவையின் தலைவர் சு.நிஷாந்தன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாண சபையில் தகுதியுள்ள தமிழ் அதிகாரிகள் இருக்கின்ற நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வடக்கில் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட வருகின்றனர்.
மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராக இருக்கின்ற பந்துள என்பவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கி மாகாண இறைவரித் திணைக்களத்துக்கு வடமாகாண ஆளுநரின் சம்மதத்துடன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
அவரின் பதவிக்காலம் மார்ச் 31 நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்ற நிலையில் மீண்டும் அவருக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்கு வடமாகாண பிரதம செயலாளரும் ஆளுநரும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
வடமாகாணத்தில் தகுதியான அதிகாரிகள் பலர் இருக்கின்ற நிலையில் அனுராதபுரத்தில் இருந்து பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை அதுவும் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு சேவை நீடிப்பு வழங்குவதன் நோக்கம் என்ன?
யுத்த காலத்தில் அனைத்து துறைகளிலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் சிறந்த நிர்வாகத்தையும் சிறந்த பொறுப்புகளையும் அடைய கூடியதாக இருந்தது.
ஆனால் இன்று தமிழ் அதிகாரிகளை அரசியல் நோக்கத்துக்காக உயர் பதவிகளில் அமர்த்தாமல் மத்திய அரசு தமக்கு ஏற்ற வகையில் பெரும்பான்மையின் அதிகாரிகளை வடக்கில் நியமனம் செய்கிறது.
உதாரணமாக வடமாகாண சுகாதார பணிப்பாளராக தற்போது கடமை ஆற்றும் திலீப் லியனகேயை விட சேவை மூப்பு கொண்ட தமிழ் அதிகாரிகள் வடக்கில் இருக்கின்ற நிலையில் அவரை நியமித்துள்ளார்கள்.
வடமாகாண அரசு நிர்வாகங்களில் திட்டமிட்ட முறையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்ந்தும் நியமிப்பதை ஆளுநர் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வடமாகாண சபையை முடக்கிக் கட்சி பேதம் இன்றிப் போராட்டம் நடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.