தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்க...
தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் திருகோணமலை, புல்மோட்டை பகுதிக்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “திருகோணமலை, புல்மோட்டையில் பிக்குவின் அட்டகாசங்கள் குறித்து கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள், இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து தங்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கூறுவதற்கு நீங்களும் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க இன்று நாம் இங்கு விஜயத்தை மேற்கொண்டோம்.
சில நேரங்களில் பிக்குமார்கள் நேரடியாக புல்மோட்டை மக்களிடம் வந்து துப்பாக்கிகளைக் கொண்டு அச்சுறுத்துவதும், மிரட்டுவது மற்றும் கற்களை போடுவது போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றது.
வடக்கு – கிழக்கிலே தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் அனைத்து பிரதேசங்களிலுமே இது போன்ற விடயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாங்கள் இவ்விடயங்களுக்கு எதிராகப் போராட்டங்களை செய்திருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட ஒரு இடத்தில் இதே பிக்கு இரவு நேரத்தில் இராணுவ பாதுகாப்புடன் வந்து காணி அபகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை விரட்டியடித்தோம்.
இது போன்ற அடாவடி பிக்குகளிடம் இருந்து எங்கள் காணியைக் காப்பாற்ற வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.