ஊடகப் பரப்பில் துணிச்சலான ஆளுமையை இழந்துவிட்டோம்! -சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இழப்பு குறித்து யாழ். ஊடக அமையம் இரங்கல் ஜனநாயகத்தின் ந...
ஊடகப் பரப்பில் துணிச்சலான ஆளுமையை இழந்துவிட்டோம்!
-சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இழப்பு குறித்து யாழ். ஊடக அமையம் இரங்கல்
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகப் பரப்பில் இருந்து பேனா முனையின் துணையோடு ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பொ.மாணிக்கவாசகம் என்ற ஊடக ஆளுமையை நாம் இழந்துவிட்டோம்.
சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் ஊடகங்களில் கோலோச்சிய ஆளுமையின் கரங்கள் ஓய்ந்துவிட்டன. ஓய்வின்றி ஒலித்த குரல் அமைதி கொள்கிறது.
நோயின் பிடியில் சிக்கி 76 வயதியில் ஓய்வு கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இறுதிவரை தற்துணிவுள்ள பேனா முனை போராளியாக திகழ்ந்தார்.
யுத்த காலங்களிலும் யுத்தத்திற்குப் பின்னரான காலங்களிலும் செய்திகளை நடுநிலை தன்மையோடு, உள்ளதை உள்ளதாகச் சொல்லி, தமிழ் மக்களின் அவலங்களை உலகுக்கு வெளிப்படுத்திய உண்மை ஊடகவியலாளர் இவர். பல உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிச்சலோடும் சோரம் போகாமலும் பேன முனையோடு இவர் போராடினார். அவர் வெளியிட்ட செய்திக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும் விடுதலையாகி மேலும் உத்வேகத்தோடு களமிறங்கி மக்கள் பணி செய்தார்.
அண்மையில்தான் வாழ்நாள் சாதனையாளராக இவர் கௌரவிக்கப்பட்டார். அத்துடன், ஊடகத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளுக்கும் அவர் சொந்தக்காரர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துக்கு பலம் சேர்த்த மாணிக்கவாசகம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் துயரில் யாழ்.ஊடக அமையமும் பங்கு கொள்கிறது. அவர் பயணித்த தடத்தில் ஜனநாயகத்துக்கான பேனா முனைப் போராட்டம் தொடரும் என்ற உறுதியோடு பேனா முனைப் போராளியான பொ. மாணிக்கவலாசகம் அவர்களுக்கு இறுதி விடை கொடுக்கிறோம்.
யாழ்.ஊடக அமையம்
இராசாவின் தோட்டம் வீதி,
யாழ்ப்பாணம்