யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இடம்பெறும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(12...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இடம்பெறும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(12) பிற்பகல் 2:30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை நெல்சன் திரையரங்கு முன்பாக தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் நான்கு அடி உயரம் கொண்ட புத்தர் சிலையானது நாளை ஞாயிற்றுக்கிழமை நிறுவப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்திடம் எடுப்பது பிச்சை வாங்குவது புத்தர் சிலையா!தாய்லாந்து புத்தருக்கு கோணமலையில் என்னவேலை ! திருகோணமலை எங்கள் சொத்து ! கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரம் எங்கள் சொத்து!வடக்கும் கிழக்கும தமிழர் தாயகம்! தொல்லியல் திணைக்களமே வெளியேறு!இராணுவமே வெளியேறு !கடற்படையே வெளியேறு! விமான படையே வெளியேறு !பொலிஸ் அராஜகம் ஒழிக ! இனப்படுகொலை அரசே இன்னும் நீ அடங்கவில்லையா!வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும் என்றவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் இன்று இனப்படுகொலை இடம்பெற்று தமிழர் தேசம் எங்கும் எம் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல்களை நாம் பலவழிகளுக்கூடாகவும் எமது அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாகவும் ஆத்மாக்களை நினவு கூறி வரும் நிலையில் எம்மை தூண்டும் முகமாக இவ்வாறான பௌத்த மயமாக்கல் செயற்றிட்டங்களை இந்த ரணில் அரசு தொடர்கிறது.
மேலும் சுதந்திரமான மாணவர் சமுதாயமாக வடகிழக்கில் நாம் போராட்டங்களை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் அதிகரித்து இங்கே வடகிழக்கில் காணப்படுகின்றது.மே 18 எமது இனப்படுகொலை தினத்திலும் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரமும் காணி அளவீடு மேற்கொள்ளபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம் இனத்தை அழித்து எம்மை நினைவேந்த கூட இந்த அரசு மறைமுகமாக தடங்கல்களை ஏற்படுத்துவதாக நாம் இச்செயற்பாடுகளை பார்கின்றோம் ஆகவே பொளத்த சிங்கள மயமாக்கத்தை இந்த அரசு தொடருகின்ற பொழுது வடகிழக்கு தழுவியரீதியில் எமது போராட்டம் வெடிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளிற்கு ஒளிப்படமெடுத்து புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கும் இதன்போது மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.