புதிய பயங்கரவாத சட்ட மூலம் நிறைவேறினால் பேசாமல் இருப்ப வர்களும் கைது செய்யப்படலாம். ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா. பாராளுமன்றத்தில் சமர்...
புதிய பயங்கரவாத சட்ட மூலம் நிறைவேறினால் பேசாமல் இருப்ப வர்களும் கைது செய்யப்படலாம். ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டால் பேசினாலும் பேசாமல் இருந்தாலும் கைது செய்யப்படலாம் என ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற உழைக்கும் மகளிர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத சட்டம் அதைக் காட்டிலும் மோசமான சட்ட மூலமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் காணப்படுகிறது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சுதந்திரமாக ஒரு மனிதன் நடமாடும் சுதந்திரத்தை பறிப்பதாக அமைவதோடு ஊடகங்களை அடக்குவதாக அமைகிறது.
மேலே குறிப்பிட்டது போன்று ஒருவர் பேசினாலும் கைது செய்யப்படலாம் பேசாமல் இருந்தாலும் கைது செய்யப்படலாம் என்பதற்கு உதாரணம் ஒன்றை கூறுகிறேன்.
ஒருவர் பொது வெளியில் பேசிய விடயங்களை அரசுக்கு எதிரானது என கூறி அவரை கைது செய்ய முடியும் அவ்வாறு ஒருவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவரை அரசுக்கு எதிராக தூண்டப்படுகிறார் எனக் கூறி அவரையும் கைது செய்ய முடியும்.
இதனை ஊடகங்கள் ஒருவர் கூறிய விடயத்தை அச்சு ஊடகங்களில் எழுதுவதோ இலத்திரனியல் ஊடகங்களில் பதிவிடுவதோ அல்லது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை அரசுக்கு எதிரான செயற்பாடு என கூறி கைது செய்ய முடியும்.
ஏனெனில் பயங்கரவாதம் என்பதற்கு சரியான விளக்கங்களோ அல்லது வரையறைகள் இதுவரை குறிப்பிடப்படவில்லை.
அரகலை போராட்டத்திற்கு பின்னர் இனியொரு வலுவான போராட்டம் இடம் பெறுவதை தடுக்கும் முகமாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை 18 மாதங்கள் தடுத்து வைத்திருக்க முடிவதோடு பிணை வழங்குவதானால் சட்டமா அதிபரிடம் அனுமதி பெறப்பட வேண்டும்.
ஆனால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்படுவதோடு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
18 மாதங்களாக தடுத்து வைக்ப்படுவதை மூன்று மாதங்களாக புதிய சட்டமூலத்தில் கூறப்பட்டாலும் வழக்கு தாக்கல் தொடர்பில் சுமார் 20 வருடங்கள் வரை சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாமலே இழுத்தடிக்க முடியும்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் கைது செய்யப்படும் நபர் ஒருவர் அந்தப் பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் ஒப்புதலுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் மூன்று மாத தடுப்பு காவலில் வைத்திருக்க முடியும்.
மேலும் நீதிமன்றத்துக்கு உரிய அதிகாரங்கள் சில ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு உட்பட்டதாக புதிய சட்டமூலத்தில் வெளி வர உள்ளது.
அதாவது நாட்டுக்குள் செயல்படும் தனி நபர்களை அல்லது குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் நிதிகளை முடக்குவதற்கும் உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றங்களில் இருந்து நிறைவேற்று ஜனாதிபதியின் கைகளுக்கு செல்கிறது.
ஒரு தனி மனிதன் நாட்டுக்குள் நடமாடும் சுதந்திரத்தை ஒரு குறிக்கப்பட்ட பிரதேசத்துக்குள் நடமாடும் சுதந்திரம் அல்லது வெளிநாட்டுக்கு செல்வதையோ ஜனாதிபதி நினைத்தால் தடுப்பதற்குரிய அதிகாரம் புதிய சட்ட மூலத்தில் வகுக்கப்பட்டுள்ளது
இவ்வாறான நிலையில் நாட்டினுடைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ யார் என்ன சொன்னாலும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கூறுகிறார்.
அவரின் கருத்தை பார்க்கும் போது நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாதச் சட்டத்தை முற்றாக நீக்குவேன் என சர்வதேசத்திடம் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபை தயாரித்தவர்களில் ஒருவரான நீதி அமைச்சர் விஜயதாச நிறைவேற்றுவேன் எனக் கூறும் போது ஜனாதிபதி மௌனமாகவே உள்ளார்.
இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் தொடர்ச்சியாக தங்களிடமே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ள நிலையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேறுகிறதோ இல்லையோ தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற மனோநிலையில் உள்ளனர்.
ஆகவே பல்வேறு ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை தோற்கடிப்பதற்கு தென் இலங்கை மக்களும் தயாராக உள்ள நிலையில் சிறுபான்மை மக்களும் அதற்கு ஆதரவாக செயல்படுவதே காலத்தின் கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்தார்.