பொருளாதார நெருக்கடி காலத்திலும் யாழில் நிதி விரயம். ந.லோகதயாளன். இலங்கை அரசு தொடர்ந்தும் வெளிநாட்டு உதவிகளில் தங்கியிகியிருக்கும் சூழலில்...
பொருளாதார நெருக்கடி காலத்திலும் யாழில் நிதி விரயம்.
ந.லோகதயாளன்.
இலங்கை அரசு தொடர்ந்தும் வெளிநாட்டு உதவிகளில் தங்கியிகியிருக்கும் சூழலில் கிடைக்கும் நிதிகளும் வீண்டிக்கப்படுவதான குற்றச் சாட்டுகளும் முன் வைக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் மற்றுமோர் சம்பவம் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதில் 2022ஆம் ஆண்டு இலங்கை நாடு முழுவதும் உச்சபட்ச நிதி நெருக்கடி காரணமாக நாடே பெரும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதன்போது கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டையும் இலங்கை எதிர்கொண்டு நின்றபோது அந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சீர் செய்து ஒழுங்கமைக்கும் செயல் முறைக்கு எனவும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன் வைத்த கோரிக்கையின் பெயரில் யு.என்.டீ.பி. நிறுவனம் 2022இல் வழங்கிய நிதி பயன்பாடு இன்றிப்போயுள்ளமை கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கமைப்பிற்காக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் இவ்வாறு அதிக நிதியை செலவிட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வழங்கிய பதிலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக இலங்கை அரசின் டொலர் கையிருப்பு 2021 ஆம் ஆண்டு முற்றாக தீர்ந்து நிதியே இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. இதனால் 2022இல் நாட்டில் மிக முக்கிய பொருளான எரிபொருள் உடபட பல பொருட்கள் முழுமையாக கையிருப்பு இன்றி நாடு முழுவதும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இக் காலத்தில் மின்சாரத் தடையும் ஏற்பட்டதன் விளைவாக மக்கள் செயவதறியாது வீதியில் இறஙகிப் போராடும் நிலைமை ஏற்பட்டு அது ஆட்சி மாற்றம் வரையில் சென்றது. இந்த நெருக்கடி இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களிலும் ஏற்பட்டாலும் யாழ்ப்பாணம் நிர்வாகத்தில் வாழும் சுமார் 2 லட்சம் குடும்பங்களின் எரிபொருள் தட்டுப்பாட்டை சீர் செய்யவென யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மேற்கொண்ட முயற்சிக்கு யு.என்.டீ.பி மூலம் கிடைத்த நிதியே வீண் விரயத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் 15 பிரதேச செயலாளர் பிரிவிலும் வாழும் மக்களிற்கும் எரிபொருள் பங்கீட்டு அட்டையை விநியோகித்து அதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை சீர் செய்யவென மாவட்டச் செயலகம் மூலம் 2 லட்சம் பங்கீட்டு அட்டைகள் அச்சிடப்பட்டன. அவ்வாறு அச்சிடப்பட்ட பங்கீட்டு அட்டைக்கு யு.என்டீ.பி மூலம் பல லட்சம் ரூபா பணம் செலவு செய்தமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச பட்ச எரிபொருள் தட்டுப்பாடு நிலவியபோது அரச அதிகாரிகள் உடனடியாக உருப்படியான நடவடிக்கைகளை எதனையும் எடுக்கவில்லையெனவும் அதிலும் குறிப்பாக மாவட்டச் செயலகம் அதில் பெரிதும் தவறிவிட்டது என விமர்சணங்கள் அதிகமாகவே முன் வைக்கப்பட்டன.
இவ்வாறான விணர்சணங்கள் உச்சம்பெற்ற சமயம் அதனை நிவர்த்தி செய்வதற்காக சில நடவடிக்கைகள் எடுத்தாலும் பங்கீடு என்னும் பெயரில் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்ககுவதற்காக
அச்சிடப்பட்ட பங்கீட்டு அட்டைகளில் பெரும்பகுதி அட்டைகள் விநியோகிக்கப்படவே இல்லை எனவும் வழங்கியவற்றிலும் மிகச் சொற்ப அளவு அட்டைகளிற்கு மட்டும் இருதடவை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக தற்போது கண்டுகொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடானது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டபோது யாழ். மாவட்டச் செயலகம் இந்த தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த என்னும் பெயரில் விநியோகித்த பங்கீட்டு அட்டைகளை 2022 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் திகதி அச்சிடப்பட்டதன் பிரகாரம் அதன் பின்னரே அவை விநியோகித்திருக்க முடியும் என்பதனை நிரூபணம் செய்கின்றது. அதன் பின்பு 15 பிரதேச செயலாளர் பிரிவின் ஊடாக விநியோகித்து அவற்றை கிராம சேவகர்கள் பூரணப்படுத்தி உரியவர்களிடம் வழங்கப்பட்ட நிலைமையில் 2022ஆம் ஆண்டு 8ஆம் மாதம் கியூ.ஆர் கோட் என்னும் பங்கீட்டு விநியோக நடைமுறையினை மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டு வந்துவிட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வாறு பயன்பாடற்ற பங்கீட்டு நடைமுறை ஒன்றிற்காக 2 லட்சத்து 943 பங்கீட்டு அட்டைகள் அச்சிடப்பட்டு அதற்காக மாவட்டச் செயலகம் 15 லட்சத்து 46 ஆயிரத்து 531 ரூபா 20 சதம் அச்சிட்ட செலவாக பங்கீட்டு அட்டையை அச்சிட்ட பதிப்பகத்திற்கு கொடுப்பணவு மேற்கொண்டுள்ளமையினை மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபன் ஒப்பமிட்டு உறுதி செய்துள்ளார்.
இவ்வாறு மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்ட நிதியினை யு.என்.டீ.பி நிறுவனத்தின் மூலம் பெற்று வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலகம் எழுத்தில் வழங்கிய பதிலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விநியோக அட்டை அச்சிட்ட செலவான 15 லட்சத்து 46 ஆயிரத்து 531 ரூபா 20 சதம் 2022-07-15 ஆம் திகதிய சிட்டையின் பிரகாரம் யாழ் நகரில் உள்ள பதிப்பகத்திற்கு 6344 இலக்க சிட்டைக்காக தீர்ப்பனவு செய்யப்பட்டுள்ளமையும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மாவட்டச் செயலகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதி நெருக்கடியால் நாடு திணறிய சமயம் அதனைபோக்குவதற்கு எனப்போடப்பட்ட திட்டமும் நிதிச் செலவை மட்டுமே ஏற்படுத்தியமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபரும் தகவல் உத்தியோகத்தருமான ம.பிரதீபன் மற்றும் கணக்காளர் ஒப்பமிட்டு வழங்கியுள்ள பதில் கடிதங்கள் மூலமும் கொடுப்பனவிற்கான சிட்டைகளும் இவற்றை உறுதி செய்து நிற்பதோடு அச்சிடப்பட்ட அட்டைகள் அனைத்தும் பயன்படுத்தப்படவில்லை எனவும் பதிலளித்துள்ளனர்.
இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்டகாலமாக வாகன சேவை நடாத்திவரும் சா.சந்திரனை இது தொடர்பில் கேட்டகோது,
நிதி இன்மையால் எரிபொருள் இல்லை என்றனர். நாள் கணக்கில் வீதிகளில் காவல் கிடந்து எரிபொருளை பெற்று அதன் மூலமே எமது குடும்ப வருமானங்களை பார்த்தோம் ஆனால் எமது வரிப் பணத்தில் மாத சம்பளம் பெற்ற அதிகாரிகளின் இவ்வாறான திட்டமிடப்படாத செயல்களே இன்று நாடு இவ்வாறு சீரழிவதற்கு காரணமாக அமைகின்றது இதனை நாம் கூறினால் படிக்காதவன் இப்படித்தான் கூறுவான் என்பார்கள் எனத் தெரிவித்தார்.