நாட்டின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்க மூன்று வௌிநாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்...
நாட்டின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்க மூன்று வௌிநாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் , IOC என்பன போதுமான டொலர் கையிருப்பை பராமரிக்கத் தவறியதால், கடந்த காலத்தில் எண்ணெய் விநியோகத்தில் வரிசைகள் ஏற்பட்டதாகக் கூறி மின்சக்தி , எரிசக்தி அமைச்சு Sinopec , R.M.Parks நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல நிபந்தனைகளின் அடிப்படையில், எரிபொருள் பிரச்சினையை நிவர்த்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சு அறிவித்திருந்தது.
ஒரு நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விற்று, அதன் மூலம் ஈட்டும் வருமானத்தை, குறித்த எரிபொருள் தொகையை கொண்டு வந்த ஒரு வருடத்தின் பின்னரே நாட்டில் இருந்து வௌியே கொண்டு செல்ல முடியும் என்பது வௌிநாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் ஒன்றாகும்.
அத்துடன், அந்த வருமானத்தை டொலராக மாற்றுவதற்கு 9 மாதங்களின் பின்னரே அனுமதி வழங்கப்படுமெனவும் அடிப்படை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதாந்த அடிப்படையில் நாட்டிற்கு கொண்டுவரப்படும் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களின் மொத்த மாதாந்த விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் அமைச்சு அல்லது பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்தால் சேமிக்கப்படும்.
எவ்வாறாயினும், மே 22 ஆம் திகதி Sinopec உடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்னர், மே 19 ஆம் திகதி இந்த இரண்டு நிபந்தனைகளும் அமைச்சரவை பத்திரமொன்றினால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.