-பொறுப்பில்லாத அதிகாரிகளும் கண்டுகொள்ளாத அரசும்- -துன்னாலைச் செல்வம்- யாழில் வைத்தியசாலை மருத்துவக் கழிவுகள் பொருத்தமான இடமின்றி மக்கள் குடி...
-பொறுப்பில்லாத அதிகாரிகளும் கண்டுகொள்ளாத அரசும்-
-துன்னாலைச் செல்வம்-
யாழில் வைத்தியசாலை மருத்துவக் கழிவுகள் பொருத்தமான இடமின்றி மக்கள் குடியிருக்கும் பிரதேசங்களில் தமக்கு இசைவான கண்ட கண்ட இடங்களில் புதைக்கப்படுவதாகவும் எரிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். அதாவது எரியூட்டக் கூடிய மருத்துவக் கழிவுகளை எரியூட்டியும், மண்ணில் உக்கக் கூடிய மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதைக்க கூடிய மருத்துவ கழிவுகளை மண்ணில் புதைத்தும் வந்தால் சூழல் மாசடைவை தடுக்க முடியும் என்று தெரிந்தும் யாழில் இயங்கும் அரச, தனியார் வைத்தியசாலைகள் இதனை கண்டு கொள்வதில்லை.
பொறுப்பற்ற விதமாக இயங்கும் வைத்தியசாலைகளால் இந்தப் பிரச்சினை எழுகிறது. இவற்றிற்கு உதாரணமாக கடந்த 2020 இல் வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகம் அமைந்துள்ள யாழ். பண்ணைப் பகுதியில் உள்ள அலுலகத்தில் பாரிய குழி ஒன்று அமைக்கப்பட்டு அதனுள் காலாவதியான மருந்துகள் டப்பாக்களுடன் தீயிட்டு அழிக்கப்பட்டன.
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவக் கழிவுகள் கடந்த 10.9.2021ஆம் திகதி யாழ்.அரியாலை செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்திற்குள் டிப்பர் வண்டிகளில் ஏற்றி வந்து புதைத்தமை வெளிச்சத்துக்கு வந்தது.வெற்றுப் போத்தல்கள் , ஊசிக் கழிவுகள் இதில் அடங்கின.
அடுத்து யாழில் தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலைக் கழிவுகளை இரகசியமாக தீயிட்டதற்கு 70 ஆயிரம் ரூபா குற்றப் பணத்தை செலுத்தியது.
அடுத்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து காங்கேசன்துறை சீமேந்து ஆலைக்கு முன்னர் கல் அகழப்பட்ட குழிகளில் கொட்டப்படும் வைத்தியசாலைக் கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகளும் காணப்படுகின்றன.
யாழில் வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதற்கு தெரிவு செய்யும் இடங்களும் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களாக இருப்பதால் மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதன் காரணமாக கழிவுகள் அகற்றுவதற்கான ஒரு இடத்தை தெரிவு செய்ய முடியாது வைத்தியசாலை நிர்வாகம் இருக்கிறது.
யாழ்.மண்டைதீவில் கழிவுகளை கொட்டி அகற்ற எடுத்த முயற்சி மண்டைதீவிலும் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. யாழ். கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவ எடுத்த முயற்சியும் கைவிடப்பட்டது. எரியூட்டி அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதில் இழுபறி நிலவுகிறது. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
இந்த ஆண்டு இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சில விளக்கங்களை வழங்கினார்.
அதாவது மருத்துவக் கழிவுகள் என்பதில் உடலின் சில பாகங்கள், குருதி, சிறுநீர் போன்றவை தான் இருக்கும். முழுமையான உடலை தகனம் செய்கின்றார்கள். அதில் சில கழிவுகள் மிஞ்சும். ஆனால் மருத்துவக் கழிவுகளை எரியூட்டிகள் ஊடாக தகனம் செய்யும் போது எவையும் மிஞ்சாது. சூழலுக்கு எரியூட்டி ஊடாக புகை செல்வதே தெரியாது. எரியூட்டியில் முதலில் 650 டிகிரியில் மருத்துவக் கழிவுகள் தகனம் செய்யப்படும். பின்னர் 800 தொடக்கம் ஆயிரம் செல்சியஸ் வெப்பத்தில் அவை இரண்டாவதாக தகனம் செய்யப்படும். இதனால் சூழல் பாதிப்பு ஏற்படாது என்றார். குழிகளில் கொட்டப்படும் கழிவுகள் தொடர்பில் விளக்கம் இல்லை.
கீரிமலையில், உள்ள நல்லிணக்கபுரம் அமைந்த பகுதிக்கு அருகில் உள்ள குழிகளில் அனுமதியின்றி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. வைத்தியசாலைக் கழிவுகள் பல வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தொற்றை ஏற்படுத்துபவை, வியாதிகளின் தொடர்புடையவை, இரசாயன, மருத்துவ, நுண்ணுயிரி விஷங்கள், கதிரியக்க கழிவுகள் மற்றும் தீங்கற்ற கழிவுகள். யாழ்.மாநகர சபை தீங்கற்ற கழிவுகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. தீங்கை விளைவிக்கக் கூடிய கழிவு 1000-1200 பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் எரியூட்டப்பட வேண்டும். வைத்தியசாலைகளில் கழிவுகளை அகற்றும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதில்லை என்பதற்கு தற்போதுள்ள உட்கட்டமைப்புகள் முறையாக காணப்படவில்லை.
தெல்லிப்பளை வைத்தியசாலை எரியூட்டியானது நாளொன்றுக்கு குறைந்தது 20 மணிநேரம் செயற்பட வேண்டியுள்ளது. இது நாளொன்றுக்கு 10 முதல் 12 மணிநேரம் மட்டுமே செயற்படுகிறது. இதனால் கழிவுகள் தேங்கும் நிலை உருவாகிறது.
பாதுகாப்பான முறையில் கழிவுகள் அகற்றப்படாமையால் கீரிமலை நல்லிணக்கபுர மக்கள் பல நோய்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு எதிராக பல போராட்டங்கள் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்று விசனத்துடன் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலை கழிவுகளை பாதுகாப்பாக முறையாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. சுற்றுச் சூழலை பாதிக்கும் அளவில் குழிகளில் கழிவுகளை கொட்டுவதை உடன் நிறுத்த வேண்டும்.
- முற்றும்-