ஆட்கடத்தல்காரர்களுடன் இணைந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்துவதில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவ லான்ஸ் கோப்ரல...
ஆட்கடத்தல்காரர்களுடன் இணைந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்துவதில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் ஒருவரை வர்த்தக கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சம்பூர் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவரும், போர் வீரர்கள் சேவை அதிகார சபையில் கடமையாற்றும் லான்ஸ் கோப்ரல் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 4, 2022 அன்று, திருகோணமலை, சம்பூரில் இருந்து 25 பேர் கொண்ட குழு ஒன்று படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தது, கடற்படையினர் இந்தக் குழுவை இந்நாட்டின் கடல் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நபர்களை வர்த்தக ஆட்கடத்தல் விசாரணை மற்றும் சமுத்திர குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில், இந்த பயணத்திற்கு 5-15 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கடத்தல்காரர்கள் மொத்தமாக மூன்றரை கோடி ரூபாயை எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.