முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைக்குழி தொடர்பில் பலரது கவனமும் திரும்பியிருக்கிற நிலையில்,...
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைக்குழி தொடர்பில் பலரது கவனமும் திரும்பியிருக்கிற நிலையில், 60 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசிப்படிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவிலும் பெண் போராளிகளின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள ஆலயக் கிணற்றில் 60 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதாகவும், அந்த கிணற்றையும் ஒருமுறை தோண்டி ஆய்வு செய்ய வேண்டுமென எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் எங்குப் பார்த்தாலும் தமிழர்களின், தமிழ் போராளிகளின், தமிழ் பிள்ளைகளின் உடலங்கள் மீட்கப்படுகின்றன.
அதுபோல, மண்டைதீவில் உள்ள ஆலயக் கிணற்றையும் தோண்டி ஆய்வு செய்தால், 60 இளைஞர்களின் உடல்கள் கிடைக்கும்.
இலங்கையின் அரசபடையினரால் குறிப்பாக கொப்பேகடுவ தலைமையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களே அந்த கிணற்றில் வீசப்பட்டிருக்கிறார்கள் எனவும், இதனாலேயே இங்குள்ள காணிகளை கடற்படையினர் பறிக்க முயல்கின்றனர் – என்றார்.