வட மாகாணத்தில் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் விசேட கலந்துரையாட...
வட மாகாணத்தில் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண மகளிர் விவகார அமைச்சின் அதிகாரிகள் சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசப்பட்டது.
குறிப்பாக போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், கைத்தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மீதான அதீத நாட்டம், இளவயது திருமணம், சிறுவர் பராமரிப்பின்மை, சிறுவர் இல்லங்களின் குறைபாடுகள், பாடசாலை இடைவிலகல், பெற்றோரின் முறையற்ற திருமணங்கள் முதலிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டன.
இந்நிலையில் குறித்த பிரச்சினைகளின் மூலகாரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகாணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அத்துடன் பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளிற்கு தினமும் ஒரு பாடம் ஒதுக்கப்படவேண்டும் என்றும், கிராம மட்டத்தில் விளையாட்டு, கலைச் செயற்பாடுகள் என்பவற்றில் இளையோரை அதிகளவில் ஈடுபடுத்தும் வகையில், பிரதேச செயலகங்களின் துறைசார் அலுவலர்கள், விளையாட்டுக் கழகங்கள், மகளிர் அமைப்புக்கள், கலைக்குழுக்கள் என்பனவற்றையும் இணைத்துச் செயற்பாடுகளை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.