முல்லைத்தீவு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் கடற்படையினர் நிலைகொண்டுள்ள காணிகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள விகா...
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் கடற்படையினர் நிலைகொண்டுள்ள காணிகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளின் கீழ் மனித புதைகுழிகள் காணப்படலாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற மனித எச்சங்களை அகழும் பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த ஆராய்ச்சிகளில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இங்கு வந்திருக்கின்றதா என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால், சரியான முறையில் இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏனென்றால் இதில் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த ஆட்களும் கலந்து கொள்ள வேண்டும். அல்லது இந்த குழாமில் இருக்க வேண்டும் என்று மக்களும் நாங்களும் விரும்புகிறோம்.
இவர்கள் சரணடைந்தவர்களை மன்னிப்பு வழங்காமல் தமது எண்ணத்திற்கு கொண்டு வந்து இங்கே புதைத்திருக்கலாம் என்று மக்கள் குமுறுகின்றார்கள்.
வட்டுவாகல், கேப்பாபிலவு போன்ற இடங்களில் உள்ள இராணுவ முகாம்களில் புத்த விகாரைகளை பெரிதாக காட்டி இருக்கிறார்கள். இந்த விகாரைகளுக்கு கீழே கூட இவ்வாறாக உடலங்கள் கிடக்கிறதோ என்ற ஊக்கங்கள் கூட எமது மக்களிடம் உள்ளது.
என்னிடம் இது தொடர்பில் மக்களும் பல தடவைகள் கதைத்திருக்கிறார்கள். இதனை சர்வதேச குழு சரியான முறையில் விசாரனை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய நியாயமான தீர்வுகளை வழங்க வேண்டும்.
இவ்வாறான விகாரைகளின் அடிப்பகுதிகளையும் தோண்டிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தர வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.