குழந்தையின் சடலத்துடன் , தாயார் நோயாளர் காவு வண்டியில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டமையால் , குறித்த நோயாளர் வண்டி ஊடாக சேவையை பெற இரு...
குழந்தையின் சடலத்துடன் , தாயார் நோயாளர் காவு வண்டியில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டமையால் , குறித்த நோயாளர் வண்டி ஊடாக சேவையை பெற இருந்த நோயாளர்களும் பல மணி நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பால் புரைக்கேறி 09 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலத்தை , தாயிடம் கொடுத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு , நெடுந்தீவு வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு , குழந்தையின் சடலத்துடன் , படகில் பயணித்த தாய், குறிகாட்டுவானில் இருந்து நோயாளர் காவு வண்டியில் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
அதன் போது நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் ? என கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்து சடலத்துடன் தாயை இறங்க விடாது நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்தனர், பின்னர் தாயை இறங்க அனுமதித்தனர்.
இந்த சம்பவம் பலர் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தீவகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் குறித்த நோயாளர் காவு வண்டி , நீண்ட நேரமாக , யாழ்.போதனா வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தமையால் , தீவக வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்கள் , நோயாளர் காவு வண்டிக்காக நீண்ட நேரமாக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை , நோயாளர் காவு வண்டியில் சடலத்தை ஏற்றினால் , தொற்றுக்கள் ஏற்படும் என்பதால் , நோயாளர் காவு வண்டியில் சடலத்தை ஏற்றுவதில்லை , எனவும் நெடுந்தீவு வைத்தியசாலையில் இருந்து எந்தவிதமான ஆவணங்களும் வழங்கப்படாமல் தாய் ஒருவர் குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்தமையால், சந்தேகத்தில், வாகனத்தில் இருந்து இறங்க அனுமதிக்கவில்லை எனவும் , குழந்தையின் உட்கூற்று பரிசோதனைக்கு , நீதிமன்ற அனுமதி வேண்டும் என்பதால் , பொலிஸார் ஊடாக நீதிமன்ற அனுமதியை பெற்றுக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டமையாலையே தாய் சடலத்துடன் நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலையினர் தன்னிலை விளக்கமாக தெரிவித்தனர். .
அதேவேளை சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சாத்தியமூர்த்தியிடம் கேட்ட போது , இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் தனக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் , முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் மாத்திரமே தன்னால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.