இலங்கையில் பொதுவாக ஊடகவியலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு இன்மையே, தொழில் வழங்குநர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு வழிவகுக்கின்றது. எனவே...
இலங்கையில் பொதுவாக ஊடகவியலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு இன்மையே, தொழில் வழங்குநர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு வழிவகுக்கின்றது.
எனவே, ஊடகவியலாளர்ளாகிய நாம் ஒன்றிணைந்து அதற்காக பாடுபடுவது அவசியமாகும்.
லைகா மொபைல் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆதவன் ஊடக நிறுவனத்திலிருந்து எவ்வித முன்னறிவித்தலும், காரணமும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தி முகாமையாளர் கலாவர்ஷ்னி கனகரட்ணத்திற்கு நேற்று (18) ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது..
2019ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி குறித்த நிறுவனத்தின் உயர்மட்ட பதவிகளில் இருந்த சிலரை பணிநீக்கம் செய்த ஆதவனின் தாய் நிறுவனமான லைக்கா (Lyca) அது தொடர்பாக எவ்வித காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
உடனடியாக வேலையிலிருந்து விலக வேண்டும் என அதன் லண்டன் தலைமையகத்தின் பல்வேறு அதிகாரிகளும், கொழும்பு அலுவலகத்தின் அதிகாரிகளும் அழுத்தம் கொடுத்த போதும், உரிய காரணமின்றி பதவி விலக முடியாதென இவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், அலுவலக அனுமதி, செய்தி பதிவேற்றும் தளத்திற்கான அனுமதி என்பன இரத்துசெய்யப்பட்டு பலவந்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஒரு வாரத்தின் பின்னர் ஆதவன் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், குறித்த நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் அதனால் பணிநீக்கம் செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த அநீதியான செயற்பாட்டிற்கு எதிராக கொழும்பு - பொரளை தொழில் நியாயாதிக்கச் சபையில் கலாவர்ஷ்னி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அத்தோடு, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவுசெய்திருந்தார்.
சுமார் 4 வருட காலமாக இந்த வழக்கு இழுபறியில் இருந்த நிலையில், ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி லைகா மொபைல் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆதவன் ஊடக நிறுவனம் ஒப்புக்கொண்டது.
அதன் பிரகாரம் தொழில் நியாயாதிக்கச் சபையின் தலைவர் முன்னிலையில் குறித்த நட்டஈடு நேற்று (18) வழங்கப்பட்டது.
இது தொடர்பில் ஊடகவியலாளர் கலாவர்ஷ்னி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
“இதனை ஒரு வெற்றியாக கூறமாட்டேன். காரணம், ஓர் ஊடகவியலாளரின் பெறுமதி வெறும் 1 மில்லியன் ரூபாய் அல்ல.
ஆனால், என் சக ஊடகவியலாளர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதோடு, தொழில் வழங்குநர்களுக்கு ஒரு பாடமாக அமையும். காரணமின்றி, நினைத்த நேரத்தில் வெளியேற்ற இனி இரு தடவைகளேனும் யோசிப்பார்கள்.
“நான் கோரிய நட்டஈட்டிலிருந்து மிகக் குறைவான தொகைக்கு நான் இணங்கியமைக்கான காரணம், கடந்த நான்கு வருடங்களாக எவ்வித உதவிகளும் இன்றி நான் தனியாகவே போராடினேன். ஊடகவியலாளர்களின் வருமானம் பற்றி நீங்கள் நன்கறிவீர்கள்.
“அவ்வாறான நிலையில், இதனை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாமை ஒரு காரணம். அடுத்தது இந்த நாட்டில் நீதிக்காக போராடியவர்களின் நிலை இறுதியில் என்னவாகின்றது என்பதும் நான் வெளிப்படையாக கூறி அறிய வேண்டிய விடயமல்ல. அந்த நிறுவனத்திலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் இதற்கு சாட்சி.
“ஊடகவியலாளர்களுக்காக செயற்படுகின்றோம் என பதாகை ஒட்டிக்கொண்டு திரியும் எமது நாட்டிலுள்ள ஐந்து ஊடக அமைப்புகளும் என் விடயத்தில் வாயே திறக்கவில்லை.
ஏதாவது நடந்தால் உடனே அறிக்கை மாத்திரம் விடும் அந்த அமைப்புகள், குறைந்தபட்சம் அந்த அறிக்கையையேனும் விடவில்லை.
“எமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லாமையே, தொழில் வழங்குநர்கள் தாம் நினைத்தவாறு நடந்துகொள்வதற்கு வழிவகுக்கின்றது. ஆகவே, ஊடகவியலாளர்ளாகிய நாம் ஒன்றிணைந்து அதற்காக பாடுபடுவது அவசியம்” என்று கூறினார்.
லண்டனில் தொலைதொடர்பு துறையில் முன்னணி வகிக்கும் லைகா மொபைல் நிறுவனம், இலங்கையில் பென் ஹோல்டிங் உள்ளிட்ட பல நிறுவனங்களை பெரும் நிதி கொடுத்து வாங்கியுள்ளதோடு, ஆதவன் தொலைக்காட்சி, ஆதவன் இணையம், ஆதவன் இணைய வானொலி போன்ற ஊடக தளங்களுக்கு மேலதிகமாக, தமிழ் எப்.எம்., ஒருவன் இணையத்தளம் ஆகிய ஊடக நிறுவனங்களை புதிதாக ஆரம்பித்துள்ளது.
தமது நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை சந்திப்பதாக பணிநீக்க கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, இலங்கையில் புதிதாக நிறுவனங்களை கொள்வனவு செய்தமையை கொண்டாடும் வகையில், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் பல மில்லியன்களை செலவழித்து விழா ஒன்றை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.