யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி , ...
யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி , பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில் சில பகுதிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நோக்குடன், அந்த காணிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட , காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதி மற்றும் தெல்லிப்பழை தென்மயிலை பகுதி ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறி உள்ள போதிலும் அவை உயர் பாதுகாப்பு வலயமாகவே தற்போதும் உள்ளது.. குறித்த பகுதிகளை மாவட்ட செயலரிடம் உத்தியோகபூர்வமாக தாம் கையளித்த பின்னரே காணி உரிமையாளர் காணிக்குள் பிரவேசிக்க முடியும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
அதனால் , காணி உரிமையாளர்கள் உயர்பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிக்கு வெளியே நின்றே விடுவிக்கப்படவுள்ள காணிகளை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் தமது காணிக்குள் வெளியாட்கள் சிலர் நடமாடுவது தொடர்பில் அறிந்து காணிக்கு சென்ற போது , உயர் பாதுகாப்பு வலய வேலிக்கு உள்ளே வாகனங்களுடன் நடமாடும் திருடர்கள் காணிக்குள் திருட்டுக்களில் ஈடுபடுவதனை அவதானித்துள்ளனர்.
அது தொடர்பில் , கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோருக்கு அறிவித்த போது , குறித்த பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதி , அப்பகுதிகளை இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னரே தாம் அப்பகுதிக்குள் செல்ல முடியும். அது வரையில் அவை உயர் பாதுகாப்பு வலயமே என தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் இராணுவத்தினரிடம் முறையிட தாம் அஞ்சுவதாகவும் , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வாகனங்களுடன் சென்று பொருட்களை களவாடுகிறார்கள் என்றால் , நிச்சயம் அவர்களுக்கு செல்வாக்கு இருக்கும். அது தொடர்பில் இராணுவத்தினரிடம் முறையிட சென்றால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என காணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
தமது கண் முன்னே தமது காணிக்குள் இருந்து பொருட்களை களவாடி செல்பவர்களை, எதுவும் செய்ய முடியாது இயலாமையுடன் பார்த்துக்கொண்டு, தமது காணி விடுவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.