வடக்கு மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் தீர்வுகள் எ...
வடக்கு மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் தீர்வுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடி எல்லைதாண்டிய மீன்பிடியை தடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தினார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஜனாதிபதிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில், அங்கஜன் இராமநாதனால் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் தெரிவிக்கையில், இழுவைப்படகு மீன்பிடித்தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் அதிகாரிகளின் அனுசரணையில் இன்னமும் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இழுவைப்படகு மீன்பிடித்தடைச் சட்டமானது, இலங்கை கடற்பரப்பில், எந்தவொரு தரப்பினரும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடை செய்கிறது. தடையை மீறி இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக படகுகளைப் பறிமுதல் செய்வது தொடங்கி, பாரிய தண்டத்தொகையையும் அறவிடும் சரத்துகளும் உள்ளடங்கி இருக்கின்றன.
குறித்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, இலங்கை, இந்திய மீனவர் தரப்புகளுக்கு இடையில், கொழும்பிலும் புதுடெல்லியிலும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றிருக்கின்றன.
இதன்போது, இழுவை வலைகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டு, அதைத் தடை செய்வது சரியான நடைமுறை என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. படிப்படியாக, இழுவை வலை தொழில்முறையில் இருந்து, இந்திய மீனவர்களை மாற்றுத் தொழில்முறைக்கு மாற்றுவது தொடர்பிலும், இந்திய மத்திய அரசு இணக்கத்தை வெளியிட்டிருந்தது.
எனவே இதுதொடர்பில் முறையான ராஜதந்திர அழுத்தத்தை பிரயோகிப்பதோடு, இழுவைப்படகு மீன்பிடித்தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும். வரும்வாரத்தில் மேற்கொள்ள இந்திய விஜயத்தை இதற்கான சந்தர்ப்பமாக ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும் என அங்கஜன இராமநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை, இலங்கையை சேர்ந்தவர்களும் அதிகாரிகளின் அனுசரணையோடு இழுவைப்படகு மீன்பிடியில் ஈடுபடுவதாக வடக்கு மீன்பிடி சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 300க்கு மேற்பட்ட இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. எனவே இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க கடற்றொழில் அமைச்சுக்கும், அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மீனவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரச்சனைகளை உள்ளடக்கிய கடிதமொன்றையும் இதன்போது அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அதில், வடமாகாணத்தில் உள்ள பல மீனவ சமூகங்களுடன் மீன்பிடித் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதன்படி. வடமாகாண மீனவ சமூகத்தால் பின்வரும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.
இந்திய மீனவர்களின் இழுவை படகு ஆக்கிரமிப்பு :-
வட கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் இழுவை படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கடல் வளங்களை அதிகமாகச் சுரண்டப்படுவதற்கு வழிவகுக்கிறது. மேலும், வடக்குக் கடலில் நீடித்து நிலைக்க முடியாத மீன்பிடி நடைமுறைகளுடன் செயற்படும் ஏனைய பிராந்திய மீனவர்களும் உள்ளனர். இத்தகைய நெறிமுறையற்ற நடைமுறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தை இந்திய அரசிடம் கொண்டுவந்து நிரந்தர தீர்வு காண அரசு முன்வர வேண்டும்.
மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் படகுத்துறைகள் புனரமைப்பு :-
பருத்தித்துறை, குருநகர், நாவாந்துறை மற்றும் கொழும்புத்துறை ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள் புனரமைக்கப்பட வேண்டும். இதில் எரிபொருள் நிரப்பு நிலையம், ஏல கூடம், வலை சீர் செய்யும் நிலையம், குளிர்சாதன அறை, ஜெட்டிகளின் மறுசீரமைப்பு, மற்றும் படகுத்துறைகளை ஆழமாக்குதல் ஆகியவை அடங்கியுள்ளன.
மானியங்கள் உதவித்திட்டங்கள்
வடமாகாண மீனவர்கள் கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதால், பல நாள் படகுகளுக்கான மானியம், மீன்படி இயந்திரம் மற்றும் மீன் வலை போன்றவற்றுக்கான அரச ஆதரவு தேவைப்படுகிறது.
பெறுமதி சேர் திட்டங்களை ஊக்குவித்தல்
மீன்வளம் தொடர்பான தொழிற்சாலைகள் பொது – தனியார் கூட்டிணைவின் கீழ் நிறுவப்பட வேண்டும் (உதாரணமாக TSF நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்)
சிறு தொழில் முயற்சியாளர்களால் நடாத்தப்படும் கருவாட்டு உற்பத்தியால் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே அவற்றை ஊக்கப்படுத்த அரசு முன்வரவேண்டும்.
இவை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய சில முக்கிய பிரச்சனைகளாகும். அவற்றின் கோரிக்கைக் கடிதப் பிரதிகள் தங்கள் கவனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளன. என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்தின்போது மீனவ அமைப்புகளால் அவருக்கு கையளிக்கப்பட்ட மகஜரின் பிரதிகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்டன.