ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியக...
ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது.
உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உட்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷ்யாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின் படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷ்யா ஒத்துக் கொண்டது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாது. இந்த ஒப்பந்தம் நேற்று காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா மறுப்பு தெரிவித்தது, இதிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
'உலகின் 40 கோடி மக்கள் இந்த உணவு பொருட்களை நம்பியிருக்கின்றனர். இதனை வினியோகம் செய்வதை தடுக்க ரஷியாவிற்கு எந்த உரிமையும் இல்லை. எகிப்து, சூடான், ஏமன், பங்காளதேஷ், துருக்கி, இந்தியா, இந்தோனேசியா என அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு உலகம் அடி பணியக்கூடாது.
ரஷ்யாவின் எதேச்சதிகார முடிவை மீறி தானிய ஏற்றுமதி தொடர உலக நாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கு தடையற்ற உணவு பொருள் வினியோகம் கோர உரிமையுண்டு. ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை தொடர முடியும். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை' என தெரிவித்துள்ளார்.