வெங்காய பயிர் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கம் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கோரிக்கை. யாழ் மாவட்டத்தில் ...
வெங்காய பயிர் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கம் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கோரிக்கை.
யாழ் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு பீடையான வெங்காய இலை சுரங்க மறுப்பி தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகம் அவதானிக்கப்படுவதாக வட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி அ.சிறிரங்கன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தின் சுன்னாகம், தெல்லிப்பளை, மாதகல் சங்கானை அச்சுவேலி, கோப்பாய் மற்றும்
வடமராட்சி பிரதேசங்களில் வெங்காயச் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கமானது
அதிகளவில் அவதானிக்க முடிகிறது.
ஆக்கிரமிப்பு பீடையான இலை சுரங்க மறுப்பி கடந்தகாலங்களில் வெங்காயத்தில் சிறியளவிலான
தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் தற்பொழுது கூடியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும் போது பெண்நிறையுடலி பல தடவைகள் முட்டை இடுவதன்
மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து தாக்கமும் அதிகரிக்கும்.
வாழ்க்கைக் காலத்தில் ஒரு பெண் இலை சுரங்க மறுப்பி இலை நுனியில் சூலிடப்படுத்தி மூலம்
துளையினை ஏற்படுத்தி இலையின் உட்பரப்பில் முட்டைகளை இடும்.
இம்முட்டைகள் சிறிய
0.5மில்லி மீற்றர் அளவுடைய வெளிர் வெள்ளை நிறமுடையது. 4-6 நாட்களில் முட்டை பொரித்து
குடம்பியாகும்.
இக்குடம்பியின் நிறமானது ஆரம்பத்தில் வெள்ளை நிறத்திலிருந்து முதிர்வடையும் போது மஞ்சள்
நிறமாக மாறும்.
இது மூன்று வளர்ச்சிப்பருவங்களை கொண்டது. இதனை வெற்றுக்கண்ணிணால்
அவதானிப்பது கடினம். குடம்பியானது இலை நுனியிலிருந்து கீழ்நோக்கி சுரங்க அமைப்பை
உருவாக்கி உட்புறத்திலிருந்து இழையங்களை உணவாக உட்கொள்கின்றது.
இதனால் வெள்ளை
நிறகோடுகளை அவதானிக்க முடியும். தாக்கம் அதிகரிக்கும் போது இலைகள் எரிந்து வைக்கோல்
நிறமாக மாறும்.
கூட்டுப்புழு கடும் கபிலநிறத்தில் காணப்படும். 7 நாட்களில் குடம்பியானது கூட்டுப்புழுவாக
மாற்றமடையும். கூட்டுப்புழு மண்ணில் அல்லது இலையின் அடிப்பகுதி சுரங்கத்தில் அல்லது
குமிழில் காணப்படும்.
குடம்பியானது நிறையுடலியாக மாறும் செயற்பாடானது காலநிலையில்
தங்கியிருக்கும்.
நிறையுடலி 3மில்லிமீற்றர் நீளமுடையது. மஞ்சள் நிறதலையுடன் இளம் கறுப்பு நிறமாகும்.
மறுப்பி தாக்கத்தை
முகாமைத்துவம் செய்தல்
இலைச்சுரங்க மறுப்பியினை கட்டுப்படுத்தல் மிகவும் சவாலான ஒரு விடயமாகக் காணப்படும் நிலையில்
ஒருங்கிணைந்த பீடைமுகாமைத்துவம் ஊடாகவே இதனை கட்டுப்படுத்தமுடியும்.
வயற்சுகாதாரத்தைப் பேணல்.
அறுவடை முடிந்த பயிர் மீதிகளை உடனடியாக வயல்லிருந்து அகற்றி மண்ணில்
காணப்படும் கூட்டுபுழுக்களை அழிப்பதற்காக உடனடியாக உழுதல் வரம்புகளில் காணப்படும் விருந்து வழங்கி தாவரங்களை அழித்தல்.
பயிர்சுழற்சியை மேற்கொள்ளல்
தூவல் நீர்பாசனத்தை மேற்கொள்வதோடு
பின்வரும் விவசாய இரசாயனங்களில் ஒன்றை காலை 7.00 மணிக்கு முன்னர் அல்லது
மாலை 5.00 மணிக்கு பின்னர் சிபார்சு செய்யப்பட்ட அளவில் விசிற வேண்டும்.
அபமற்ரின்
புரோப்பினோபொஸ்,ஸ்பெனோசைட் ,தயோசைக்கிளம் ஆகிய மருந்துகளை உரிய நடைமுறைகளை பின்பற்றி விசுறுவதோடு மேல் அதிக சந்தேகங்கள் இருப்பின் மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அல்லது தமது பகுதிகளில் உள்ள விவசாய போதனை ஆசிரியர்களை நாடுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.