ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24ஆம் திகதி முதல் காணி ...
ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24ஆம் திகதி முதல் காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையால் , பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அது தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட காணி பதிவகத்தில் இரு உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றி வந்த நிலையில் ஒருவர் சுகவீனம் காரணமாக விடுப்பில் உள்ளார். அதனால் ஒருவர் மாத்திரமே கடமைக்கு சமூகமளிப்பதனால் , கடந்த 24ஆம் திகதி முதல் மறுஅறிவித்தல் வரையில் ஒருநாள் சேவைகள் இடை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடமையில் இருக்கும் ஒரு உத்தியோகஸ்தருக்கு , வேலை பளு அதிகரித்துள்ள நிலையில் , விடுப்பில் உள்ளவருக்கு மாற்றீடாக ஒரு உத்தியோகஸ்தரை நியமிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த அலுவலகத்தில் வெளிமாகாணங்களை சேர்ந்த 06 உத்தியோகஸ்தர்கள் கடமையில் இருந்த நிலையில் ,அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி அவர்கள் தமது சொந்த மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர். அந்த வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்ப படாமல் இருந்தமையால் இரு உத்தியோகஸ்தர்களே கடமையாற்றி வந்தனர்.
இந்நிலையில் ஒரு உத்தியோகஸ்தர் விடுமுறையில் உள்ளமையால் ஒருவரே பணியில் உள்ளார்.
தற்போதைய சூழலில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயன்று வருகின்றனர். அதற்காக காணி உறுதி மாற்றங்களுக்கு அதிகளவானோர் விண்ணப்பிக்கின்றனர். அவர்கள் ஒருநாள் சேவையில் அதனை பெறவே விரும்புகின்றனர். சாதாரண சேவை மூலம் பெறுவதாயின் சுமார் ஒரு மாத கால பகுதிக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
அதேபோன்று தற்போது புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெரும்பாலானோர் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது காணிகளை தாம் நிற்கும் கால பகுதியில் மாற்றம் செய்வதற்கும் ஒருநாள் சேவையையே விரும்புகின்றனர்.
அந்நிலையில் சுமார் ஒருவார கால பகுதியாக ஒருநாள் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளமையால் பலரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
உடனடியாக யாழ்.மாவட்ட காணிப்பதிவு திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.