சீனாவின் யுனான் மாகாணத்திற்கான 4 நாள் பயணத்தை ஆரம்பித்த இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (15) காலை குன்மிங் சர்வதேச விமான நிலையத்தை செ...
சீனாவின் யுனான் மாகாணத்திற்கான 4 நாள் பயணத்தை ஆரம்பித்த இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (15) காலை குன்மிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
குன்மிங் விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) யுனான் மாகாணக் குழுவின் துணைத் தலைவர் சாவோ ஜின், (Zhao Jin) , இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பாளர் திரு. கே.கே. யோகநாதன் மற்றும் தூதரக அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுனான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7வது சீன-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சியில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார். சீனாவின் குன்மிங்கில் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை இந்த எக்ஸ்போ கண்காட்சி நடைபெறவுள்ளது.
எக்ஸ்போ ஏற்பாட்டாளர்களின் கருத்துப்படி, இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சியில் 60 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இதில் அனைத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும், பிராந்திய பொருளாதார பங்குடமை RECP உறுப்பு நாடுகளும் அடங்கும்.
‘7வது சீனா-தெற்காசியா எக்ஸ்போ கண்காட்சியானது, சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான மிக முக்கியமான பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்ற நிகழ்வாக கருதப்படுகிறது. 15 பெரிய அரங்குகள் தெற்காசியாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் கலாசார பரிமாற்றங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, மேலும் பிராந்திய ஒத்துழைப்பு, வளங்கள், தொழில்துறை பூங்கா, துறைமுகம், மருந்துப்பொருட்கள் மற்றும் சுகாதாரம், கலாசார சுற்றுலா, நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றிற்காக ஒன்பது அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
150,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இக்கண்காட்சிப் பகுதிகள் இணைய வழியாகவும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சீனா மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள் ஆகியவற்றின் முக்கிய தளமாக, எக்ஸ்போ கண்காட்சியின் மூன்று சிறப்பு நிகழ்வுகளுக்கு மேலதிகமாக அதனோடு இணைந்த இன்னும் சில நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. 4வது சீனா-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றம் (CSACF) போன்ற எட்டு தொழில்முறை மன்றங்கள் நடைபெறவுள்ளன.
இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து சீனத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதுடன், யுனான் விவசாய விஞ்ஞான கல்வி நிலையம், யுனான் மாகாண எரிசக்தி முதலீட்டு நிறுவனம் அல்லது சினோஹைட்ரோ பீரோ மற்றும் குன்மிங் மற்றும் குஷெங் கிராமத்தில் உள்ள யுனானின் ஒளிமின்னழுத்த மின் நிலையம் மற்றும் யுனான் ஸ்டேட் ஃபார்ம்ஸ் குழுமத்தின் பரிசோதனை நெல் வயல், டாலியில் உள்ள சியாகுவான் தேயிலை கண்காட்சி நிலையம் ஆகியவற்றைப் பார்வையிட பிரதமர் திட்டமிட்டுள்ளார்..
பிரதமருடன் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, ஜானக வக்கும்புர மற்றும் கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் சென்றுள்ளனர்.