மாத்தளை – எல்கடுவ பகுதியில் குடும்பமொன்றின் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவம், பாராளுமன்றத்தில் இன்று அமளிதுமளி ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில...
மாத்தளை – எல்கடுவ பகுதியில் குடும்பமொன்றின் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவம், பாராளுமன்றத்தில் இன்று அமளிதுமளி ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையிலேயே, பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் வெளியேற்றப்பட்டமைக்கு, எதிர்கட்சி;த் தலைவர் சஜித் பிரேமதாஸ தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சஜித் பிரேமதாஸ குற்றஞ்சுமத்தினார்;.
பெருந்தோட்ட மக்களினாலேயே நாட்டிற்கு டொலர் வருமானம் கிடைப்பதாகவும், அவர்களுக்கு எந்தவொரு சலுகைகளும் கிடைக்கவில்லை எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண பதிலளித்தார்.
”இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது கவலையை தெரிவித்துக்கொள்கின்றேன். நடக்கக்கூடாது ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. சட்டவிரோத குடியேற்றங்களை நிர்மாணிக்க குடும்பங்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த உதவி முகாமையாளர் நேரடியாக தலையீடு செய்துள்ளார். இது நடக்கக்கூடாது ஒரு சம்பவம். சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதனை செய்யாது, உதவி முகாமையாளர் நேரடியாக தலையீடு செய்தமையினால், குறித்த உதவி முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கி, அவர் தொடர்பிலான விசாரணைகளை நடத்துமாறு நான் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அவருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடனேயே, எமது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அந்த இடத்திற்கு சென்றார். பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ராதாகிருஸ்ணன் ஆகியோர் என்னுடன் தொடர்புக் கொண்டு கதைத்தார்கள். 24 மணித்தியாலத்திற்குள் ஜீவன் தொண்டமான் அந்த இடத்திற்கு சென்று, அந்த மக்கள் சார்பில் நின்றுக் கொண்டார். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் 24 மணித்தியாலத்திற்குள் நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தார். நிறுவனத்தின் தலைவரையும் நாம் அனுப்பியுள்ளோம்;. பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பறிக்கின்றமை பாரிய பிரச்சினை. பெருந்தோட்ட மக்களுக்கு 10 பச்சர்ஸ் காணி வழங்கப்பட வேண்டும் என நாம் கூறி வருகின்றோம். இது நியாயமற்ற செயற்பாடு. இதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த நடைமுறை சரியில்லை. பெருந்தோட்ட அமைச்சர் என்ற விதத்தில் நிறுவனம் சார்பாகவும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜீவன் தொண்டமானும் 24 மணித்தியாலத்திற்குள் செயற்பட்டுள்ளோம். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் தெளிவாக கூறிக்கொள்கின்றோம்.” என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இதேவேளை, தமது பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், அந்த சம்பவங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று விடயங்களை ஆராய்ந்திருந்தாலும், கடமை நிறைவேற்ற தவறப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்தார்.
மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியில் தற்காலிக வீடொன்றிலிருந்து பெருந்தோட்ட குடும்பமொன்று பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை அடுத்து, நேற்றுமுன்தினம் அந்த இடத்திற்கு ஜீவன் தொண்டமான் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எல்கடுவ பெருந்தோட்டநிறுவனம் சார்பில் வீடொன்றை நிர்மாணித்துக்கொடுக்குமாறு ஜீவன் தொண்டமான் உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன், குறித்த குடும்பம் வாழும் லயின் அறைகளிலுள்ள 10 குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் ஊடாக 30 லட்சம் ரூபா பெறுமதியான 10 வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்குமாறு அதன் தலைவர் பாரத் அருள்சாமிக்கு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில், குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், காணிகளை அளவீடும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில், மாத்தளை – எல்கடுவ – ரத்வத்தை பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் அமளிதுமளியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதியளித்தார்.
மனோ கணேசன் உரை
மாத்தளை – ரத்வத்தை பகுதியில் இடம்பெற்ற சம்பவமானது, பெருந்தோட்ட மக்களுக்கு மாத்திரமன்றி, இலங்கை பிரஜைகளின் நற்பெயருக்கு கலங்கதைத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலையக மக்களின் பிரஜாவுரிமை முழுமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மலையக மக்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்;.
பெருந்தோட்ட காணிகள், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமில்லை எனவும், அது அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.
கட்சி பேதமின்றி இந்த சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தினார்;.
இதேவேளை, பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான், சபையில் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு, மலையகம் சார்ந்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை என அவர் குற்றஞ்சுமத்தினார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துரையாடல்களை நடத்த வருகைத் தந்திருந்தால், பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்திருக்க முடியும் என அவர் கூறினார்.
மாத்தளை விவகாரமானது, தனது ஆதங்கமே என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையகத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின், எதிர்கட்சி கூறும் எந்தவொரு விடயத்துடனும் இணைந்து செயற்பட தயார் என அவர் உறுதியளித்தார்.
அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில் மலையக மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என ஜீவன் தொண்டமான் கூறினார்.
அரவிந்தகுமார் கருத்து
மாத்தளை – ரத்வத்தை பகுதியில் வீடு உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய உதவி முகாமையாளர் கைது செய்யப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவிக்கின்றார்.
உதவி முகாமையாளர் நீக்கப்பட்டமை போதுமானதல்ல எனவும், அவர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.