மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே க...
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என்.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.
என்.ஶ்ரீகாந்தா இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரில், காசா பிரதேசத்தில் வாழும் பலஸ்தீன மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் வருகையில், அப்பிரதேசம் தண்ணீர் மற்றும் மின்சாரமின்றி திணறிக் கொண்டிருக்கின்றது.
மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஒன்று, காசாவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டிலும் பொதுமக்களின் உயிரிழப்புக்களும் பாதிப்புக்களும் உயர்ந்து வருகின்றன.
இப்பொழுது நடைபெறுவது இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்திற்கும், பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாதத்திற்கும் இடையிலான போர் என்பதே உண்மையானது.
இஸ்ரேலுக்குள் ஊடுருவித் தாக்கிய ஹமாஸின் போர் நடவடிக்கையை சாட்டாக வைத்து, அதன் கட்டுப்பாட்டில் உள்ள காசா பிரதேசத்தையே தரைமட்டமாக்கி, இரு துண்டுகளாக அமைந்திருக்கும் பலஸ்தீன மண்ணின் ஒரு துண்டினை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிடும் இலக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு, அமெரிக்காவும் மற்றும் மேற்குலக நாடுகள் பலவும் உதவிக் கொண்டிருக்கும் நிலைமையில், உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
1948ல் இஸ்ரேலின் தோற்றத்துடன், தமது சொந்த பலஸ்தீன மண்ணிலிருந்து வேட்டையாடி விரட்டப்பட்ட பலஸ்தீன மக்களின் நீதிக்கான நீண்ட போராட்டத்தில், 1993ல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனின் மத்தியஸ்தத்துடன், இஸ்ரேலிய பிரதமர் யிற்சாக் றபினுக்கும், பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசிர் அரபாத்துக்கும் இடையில் கையெழுத்தான சமாதான ஒப்பந்தம், பலஸ்தீன மண்ணில், யூதர்களுக்கு இஸ்ரேலும், பலஸ்தீனிய அரபுக்களுக்கு பலஸ்தீனமும் என, இரண்டு நாடுகள் அருகருகாக அமைவதற்கு வழிகாட்டி, ஓர் வரலாற்று ஆச்சரியத்தையே நிகழ்த்தியிருந்தது.
ஆனால், படுகொலை செய்யப்பட்ட பிரதமர் யிற்சாக் றபினுக்குப் பிறகு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இஸ்ரேலிய தலைவர்களின் நடவடிக்கைகளால், அந்த சமாதான ஒப்பந்தம் செயல் இழந்து போனதால் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையின் உச்சக்கட்டமே, இப்போது நடைபெறும் போராகும்.
இந்தப் போரில் தலையிட்டு, போர் நிறுத்தம் ஒன்றினை சாதிக்கும் வல்லமை கொண்டுள்ள நாடுகள் எல்லாம், இஸ்ரேலின் பக்கமே இப்போது சாய்ந்து நிற்கின்றன.
மத்திய கிழக்கின் இன்றைய நிலைமை, 14 வருடங்களுக்கு முன்னர், எமது இலங்கைத் தீவில், வன்னிப் பிரதேசத்தில் அரங்கேற்றப்பட்ட மனித அவலத்தையே ஞாபகப்படுத்துகின்றது.
அரசியல் நீதி கோரி நிற்கும் இலங்கைத் தமிழ் மக்கள், தம்மைப் போலவே, ஏகாதிபத்திய சக்திகளால் வஞ்சிக்கப்பட்ட பலஸ்தீன மக்களோடு உணர்வுகளால் ஒன்றி நிற்கின்றனர் என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நேரம் இதுவாகும்.
இது தமிழ்த் தேசிய அமைப்புக்கள் அனைத்தினதும் கட்டாயக் கடமையும் கூட! – என்றுள்ளது.