இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ள...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்த ‘சுயாதீன விசாரணைக் குழு’வின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபர் என்ற அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக இந்த கிரிக்கெட் தடையை விதித்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில், தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்த பின்னணியில், அவர் இந்த மாதம் தாயகம் திரும்பியிருந்தார்.
இதையடுத்தே, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.