உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண...
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இது தொடர்பான திட்டத்தை எதிர்வரும் வரவு செலவுத் திட்ட உரையில் நாட்டிற்கு முன்வைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களைக் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்ற “தேசிய தகவல் தொழில்நுட்ப விருது வழங்கும் விழா – NBQSA 2023” நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
உள்நாட்டைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் புத்தாக்கங்களுக்கு உயர் அங்கீகாரம் வழங்குவதற்காகவும், அவர்களின் தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தளத்தை உருவாக்குவதற்காகவும், தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனமான பிரிட்டிஷ் கணினி சங்கத்தின் இலங்கைப் பிரிவினால் ஆண்டுதோறும் இந்த விருது விழா நடத்தப்படுகின்றது.
தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையில் சிறந்து விளங்கிய பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருதுகளையும் வழங்கி வைத்தார்.
பிரித்தானிய கணினி சம்மேளனத்தின் இலங்கை பிரிவின் தலைவர் அலன்சோ டொல் (Alanzo Doll) ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசை வழங்கியதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுடன் புகைப்படம் பிடிப்பதற்கும் இணைந்து கொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
‘’1980களின் தொடக்கத்தில் நான் கல்வி அமைச்சராக இருந்தபோது தகவல் தொழில்நுட்பம் பற்றி பேசினோம். அப்போது இலங்கையில் அதிகம் அறியப்படாவிட்டாலும், சின்க்ளெயார் நிறுவனத்தின் சின்க்ளெயார் அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் நம் நாட்டு பாடசாலைகளுக்கு முதலாவது சின்க்ளெயார் கணினிகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிகளை மேம்படுத்துவதற்காக கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப கவுன்சில் தொடங்கப்பட்டது.
அந்த நேரத்தில்தான் பேராசிரியர் சமரநாயக்க கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி மத்திய நிலையத்தை ஆரம்பித்தார். அப்போது இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தது. ஆனால் எங்களிடம் இல்லாத பிரச்சினைகள் அவர்களுக்கு இருந்தன. உதாரணமாக, கணினிகளை இறக்குமதி செய்ய எங்களிடம் போதுமான அந்நியச் செலாவணி இருந்தது. ஆனால் அதற்கான திறன் அவர்களிடம் இருக்கவில்லை.
இதற்கிடையில், கல்வித் துறையை மறுசீரமைக்க சீனா தயாராக இருந்தது. 1991 இல், கைத்தொழில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நான் இந்தியாவுக்கு விஜயம் செய்தேன். நான் பெங்களூர் சென்றிருந்தேன். அங்குதான் இந்தக் கைத்தொழில் தொடங்கியது. அவர்களிடம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி இருந்தது.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்தை ஆரம்பிப்பது குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். அப்போது சீனாவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்தி வந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். அந்த நாடுகள் முன்னோக்கி நகர்ந்தன. இதைத் தொடர்ந்திருந்தால், இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியை நாம் சந்திக்க வேண்டியிருக்காது.
இருப்பினும், இப்போது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. அவை நடந்து முடிந்துவிட்டன. இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டது போல், இதுவே எமக்கான கடைசி வாய்ப்பு. எனவே நாம் இப்போது தகவல் தொழில்நுட்பட்துடன் முன்னேற தயாராக வேண்டும். இல்லாவிட்டால் இந்த வாய்ப்பை என்றென்றும் இழக்க நேரிடும்.
ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல, நாட்டின் வர்த்தக நிலையை எமக்கு சாதகமாக அமைத்துக்கொள்வதோடு, ஏற்றுமதியிலும் தன்னிறைவாக இருக்க வேண்டும். மேலும் நம்மிடம் ஆடைத் தொழில் உள்ளது. நாம் தொடர்ச்சியாக தேயிலை மற்றும் ஆடைக் கைத்தொழில் துறை மீது தங்கியிருக்க முடியாது. புதிய பொருளாதார கட்டமைப்புத் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டுக்குள் புதிய பொருளாதாரத்தை கட்டமைக்க வர்த்தக தன்னிறைவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். உலகின் எந்தவொரு நாடுடனும் போட்டியிடக்கூடிய வகையிலான பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
அதன்போது பசுமை பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி என்பன தீர்மானமிக்க காரணிகளாக அமையும். பசுமை மற்றும் வலுசக்தி பொருளாதாரத்திற்கு அவசியமான சாத்தியங்கள் நாட்டில் அதிகமாக உள்ளன. அதேபோல் விரைவில் நாம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். புதிய பொருளாதார வேலைத்திட்டத்தின் ஆரம்பம் குறித்து அடுத்த வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடுவோம். அதேபோல் அதற்கான சட்டங்களை கொண்டுவரவும் எதிர்பார்த்துள்ளோம்.
1970களின் ஆரம்பக் காலத்தில் நாட்டில் சட்டரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட பொதுவுடமை பொருளாதார கொள்கையொன்று காணப்பட்ட போதிலும் 1977களில் வர்த்தக பொருளாதாரம் நடைமுறைக்கு வந்ததால் அந்தச் சட்டம் இரத்தாகியது.
இருப்பினும் இம்முறை ஒரு அடியை முன்னோக்கி வைக்கும் வகையில் போட்டித்தன்மை மிக்க பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களை கட்டமைப்பதற்கான சட்டங்களை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். சட்டம் மட்டும் போதுமானதல்ல. டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதனை தனியாக செய்யும் அளவிற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை. அதேபோல் மனித மூலதனமும் பெரும் பிரச்சினையாகியுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்திற்காக பயிற்றுவிக்கப்பட்ட மனித வளம் எமக்கு அவசியப்படுகின்றது. அதனால் அந்த துறையில் பயிற்றுவிக்கப்பட்ட பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகள் உள்ளிட்ட திறன்மிக்க மனித வளத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
இது நாம் முகம்கொடுக்க உள்ள பிரதான சவால்களில் ஒன்றாக அமையும். அதேபோல் தகவல் தொழில்நுட்பத் துறைக்குள் மனித மூலதனத்தை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
அதற்காக நமக்கான தனிப்பட்ட நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்க நேரிடும். இந்த வேலைத்திட்டங்களுடன் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் நாமும் முத்திரை பதிக்க வேண்டும்.
இலங்கை இந்தியாவுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவிற்குள் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால் எவ்வாறு பயனடைய முடியுமென்பதை நாம் சிந்திக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காக நாம் சிறந்த முறையில் செயற்பட வேண்டும். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் வலுவடைய வேண்டுமெனில் டிஜிட்டல் மாற்றமொன்று அவசியம். அவ்வாறு இல்லாமல் நாம் உலகத்துடன் பயணிக்க முடியாது.
டிஜிட்டல் மாற்றத்துக்கு அவசியமான திட்டத்தை அரசாங்கம் தயாரிக்க வேண்டும். தனியார் துறையும் அந்த வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி பயணிக்கலாம். உதாரணமாக 1977 களில் ஆடைத் தொழிற்சாலைகள் வாயிலாக எமக்கு வர்த்தகம் ஒன்று இருக்கவில்லை. இருப்பினும் 10 – 15 வருடங்களில் அந்த துறையில் பெரும் வளர்ச்சி கண்டோம். புதிய தொழில்நுட்பத்துடன் பயணிக்கும் போது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால் எமது பயணத்தை துரிதப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இங்கு விருது பெற்றவர்கள் சிலருடன் பேசும்போது மகிழ்ச்சியாக இருந்தது. முன்னோக்கிச் சென்று வியாபாரத்தை வளர்த்துக்கொள்வதே அவர்களின் தேவையாக உள்ளது. இதற்காக வங்கிகளிடத்தில் எவ்வாறு நிதியைப் பெறலாம் என்றும் எவ்வாறு வர்த்தக வியாபாரமாக மாற்றியமைப்பது என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். தற்போதும் சிலர் அதற்கான பிரவேசத்தை ஆரம்பித்துள்ளனர். அடுத்த வருடத்தில் அனைவரும் இதனுடன் இணைந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.‘’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு, பிரித்தானிய கணினி சங்கத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ராஷிக் பார்மர் (Rashik Parmar), நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்வில் உரையாற்றினார்.