இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு சுதந்திரமில்லாத நாளாக பிரகடனப்படுத்தி அன்றைய தினம் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் எதிர்ப்பு பேரணி...
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு சுதந்திரமில்லாத நாளாக பிரகடனப்படுத்தி அன்றைய தினம் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி ஆகியோர் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்தவர்கள்,
எதிர்வரும் நான்காம் திகதி இலங்கை அரசினால் சிறப்பான முறையில் சுதந்திர தினத்தினை கொண்டாடுவதற்கு பாரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஆனால் நாங்கள் தமிழ் மக்களாகிய நாங்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் எப்போதுமே ஒரு சுதந்திரம் இல்லாதவர்களாக தான் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.
எதிர்வரும் நான்காம் திகதி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் இணைந்து வடக்கிலும் கிழக்கிலும் பாரிய ஒரு எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
இந்தப் பேரணி தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லாத ஒரு கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி அந்த பேரணியை அமைதியான முறையில் செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலத்தில் தொடங்கி காந்தி பூங்கா வரை பேரணியையும் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு சந்தியில் இருந்து டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
எங்களுடைய உரிமைக்காக எமது உறவுகளுக்காக எங்களுடைய பேச்சு சுதந்திரத்திற்காக நாங்கள் வாழும் சுதந்திரத்திற்காக போராட வேண்டிய நாளாக அன்று அனைவரும் வந்து இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனை தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றோம் என அழைப்பு விடுத்தனர்.