தமிழ் மக்களின் பூர்வீக தொன்மை மிக்க இடமான வெடுக்கு நாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றில் சிங்கள பௌத்த வரலாற்றை திணிப்பது அரசின் மத அட...
தமிழ் மக்களின் பூர்வீக தொன்மை மிக்க இடமான வெடுக்கு நாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றில் சிங்கள பௌத்த வரலாற்றை திணிப்பது அரசின் மத அடக்குமுறைகளில் ஒன்றாகும் என வடக்கு மாகாண சபை அவை தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இடம்பெற்ற வவுனியா வெடுக்கு நாரி ஆதி லங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தில் நடைபெற்ற மத அடக்குமுறைக்கு எதிரான கண்டன போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சைவ மக்களின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி தினத்தில் வெடுக்கு நாரி ஆதிலிங்கேஸ்வரரை வழிபாடு செய்ய விடாமல் பொலிசார் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விடயமானது அரசியல் அமைப்பை மீறிய அடாவடித்தனமான செயலாக காணப்படுகின்ற நிலையில் நாட்டின் ஜனாதிபதியோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ குறித்த தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கின்றனர்.
வெடுக்குநாரி மலையில் தமிழ் பிராமிய எழுத்துக்கள் காணப்படுகின்ற நிலையில் தமிழ் பௌத்தம் வாழ்ந்ததற்கான சான்றுகளும் அங்கு உள்ளன.
ஆனால் தொல்பொருள் திணைக்களமும் பொலிசாரும் இணைந்து சிங்கள பௌத்தமாக மாற்றுவதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை கண்டனத்திற்குரிய விடயம்.
ஆகவே இலங்கை அரசியலமைப்பில் மத சுதந்திரத்திற்கான உரிமை வழங்கப்பட்டுள்ள போதும் இலங்கை அரசியலமைப்பை மீறி பொலிசார் மத வழிபாட்டிடத்தில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டமை இலங்கை அரசியலமைப்பின் ஜனநாயக தன்மை தொடர்பில் கேள்விகளை எழுப்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.